உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் நௌபர் மௌலவியும், ஹஜ்ஜுல் அக்பருமே - அமைச்சர் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 6, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் நௌபர் மௌலவியும், ஹஜ்ஜுல் அக்பருமே - அமைச்சர் சரத் வீரசேகர

2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரி, நௌபர் மெளலவி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இன்று (06) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக நெளபர் மௌலவி என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஹஜ்ஜுல் அக்பர் என்பவரும் இத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதான சூத்திரதாரி தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "பிரதான சூத்திரதாரிகளாக நெளபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவரையுமே நாம் அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். 

பிரதான சூத்திரதாரி என்பவர் யார் என்றால் இந்தக் கொள்கையை கொண்டு வந்தது யார் (என்பதாகும்) ஐ.எஸ் சிந்தனையை (இலங்கைக்கு) கொண்டு வந்தது யார்?, இந்த அல்பரா, வல்பரா எனும் சிந்தனைகளை கொண்டு வந்தது யார்?, வஹாபிஸத்தை கொண்டு வந்து யார்?, இவ்வாறான தற்கொலைத் தாக்குதலை கொண்டு வந்து, இஸ்லாம் மதம் மாத்திரம் இருக்க வேண்டும், ஏனைய மதங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும், சிலைகளை அழிக்க வேண்டும், ஏனைய மதங்களை பின்பற்றுவோரை அழிக்க வேண்டும் எனும் கொள்கைகளைக் கொண்டு வருபவரே பிரதான சூத்திரதாரி, அவர்தான் நெளபர் மெளலவி. அவர்தான் ஸஹ்ரானையும் மூளைச் சலவை செய்தார். அவ்வாறு வேறு பிரதான சூத்திரதாரிகள் இருந்தால் எமக்கு தெரிவியுங்கள். நாம் அவரை கைது செய்வோம்." என்றார்.

குறித்த 8 தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பிலான அனைத்து விசாரணைகளையும் பொலிஸார் நிறைவு செய்துள்ளதாக தெரிவித்த அவர், இத்தாக்குதல்களுடன் நேரடியாகத் தொடர்புபட்ட 32 சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பான சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், கொலை மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் வழக்குத் தொடருவதற்கான சாட்சியங்கள் அடங்கிய பிரதான விடயங்கள் கொண்ட 8 கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சரத் வீரசேகர, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை வரும் வரை குறித்த நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதை சட்டமா அதிபர் தள்ளி வைத்ததாகவும் தற்போது அது கிடைத்துள்ளதால், 12 பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழாம் மூலம் சாட்சியங்களிடையே பரஸ்பரத் தன்மைகள் காணப்படுகின்றதா என ஆராய்ந்து குறித்த நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்வார் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

ஆயினும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், அந்த வகையில் வகுப்புக்களை நடாத்த உதவியமை தொடர்பில் நேற்றையதினம், மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அந்த வகையில் இவ்விசாரணைகளின் அடிப்படையில் தற்போது வரை 75 பேர் தடுப்புக் காவல் உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 211 பேர் விளக்கமறியலில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment