கூட்டணியை பலப்படுத்தி மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட எதிர்பார்த்துள்ளோம் - பலம் வாய்ந்த நாடுகளை விட இலங்கை சர்வதேசத்தில் 10 ஆவது இடத்திலுள்ளது : அமைச்சர் தாரக பாலசூரிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 6, 2021

கூட்டணியை பலப்படுத்தி மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட எதிர்பார்த்துள்ளோம் - பலம் வாய்ந்த நாடுகளை விட இலங்கை சர்வதேசத்தில் 10 ஆவது இடத்திலுள்ளது : அமைச்சர் தாரக பாலசூரிய

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும், பங்காளி கட்சிகளுடன் கூட்டணியமைத்து போட்டியிட்டதால் அமோக வெற்றி பெற முடிந்தது. கூட்டணியை பலப்படுத்தி மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட எதிர்பார்த்துள்ளோம் என பிராந்திய உறவுகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

கேகாலை நகரில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாட்டு மக்கள் தோற்றுவித்துள்ளார்கள். ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. 

பூகோள மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய கொவிட்-19 வைரஸ் தாக்கம் வீழ்ச்சியடைந்திருந்த தேசிய பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தியது. சிறந்த திட்டமிடலின் காரணமாக பொருளாதாரம் முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளது. 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளை காட்டிலும் இலங்கை கொவிட்-19 வைரஸ் பரலவை கட்டுப்படுத்தி சர்வதேச மட்டத்தில் 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பான முறையில் வாழ மக்கள் தற்போது பழகிக் கொண்டுள்ளார்கள். தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும், குறிப்பாக மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் உண்டு. மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வது மாவட்ட அபிவிருத்தி குழுவின் பிரதான பொறுப்பாகும்.

அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை சிறந்த முறையில் முன்னெடுக்க முடியும். பொதுஜன பெரமுன இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் பங்காளி கட்சிகளை ஒன்றினைந்து கூட்டணியமைத்ததன் காரணமாக அமோக வெற்றி பெற்றது.

கூட்டணியில் பல கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இக்கருத்து வேறுப்பாடு அரசாங்கத்தை பலவீனப்படுத்தக்கூடாது என்பதை கூட்டணியின் உறுப்பினர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கூட்டணியாக போட்டியிட எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment