சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் செய்திகள் குறித்து ஆராய விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Thursday, April 15, 2021

சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் செய்திகள் குறித்து ஆராய விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர

(இராஜதுரை ஹஷான்)

பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை முடக்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல, அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை ஒரு தரப்பினர் தவறான முறையில் பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் போலியான செய்திகள் குறித்து ஆராய விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அடமிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

முல்லேரியாவ பிரதேசதத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையில் சட்டம் உருவாக்கும் யோசனை ஏதும் கிடையாது. தற்போது நடைமுறையில் உள்ள தண்டனை சட்டக் கோவையின் உள்ளடக்கங்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தவும், புதிய விடயங்களை இணைத்துக் கொள்ளவும் மாத்திரம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளில் கருத்து சுதந்திரம் பிரதான ஒன்றாக காணப்படுகிறது. ஜனநாயக நாடுகளில் கருத்து சுதந்திரம் தாராளமாக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் அத்தன்மையே காணப்படுகிறது. நல்ல நோக்கத்திற்காக வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை ஒரு தரப்பினர் தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பதிவேற்றம் செய்து சமூகத்தின் மத்தியில் மாறுபட்ட நிலைப்பாட்டை தவறான முறையில் தோற்றுவிக்கிறார்கள் ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் பதிவுகள் வெறுக்கத்தக்க வகையில் காணப்படுகிறது. இவை தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் அடிப்படைவாத முரண்பாடுகளை தோற்றுவிக்கும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. கருத்து சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்துபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

அரசாங்கம் சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கடந்த காலங்களில் சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டன. முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மை என இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment