கொழும்பு மாணவனின் தற்கொலை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் - செந்தில் தொண்டமான் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

கொழும்பு மாணவனின் தற்கொலை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் - செந்தில் தொண்டமான்

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்வி பயின்ற எஸ்.வித்தகன் என்ற மாணவனின் தற்கொலை, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில், சமூக வலைத்தளங்களில் பல்வேறுபட்ட பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் அம்மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளமை பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பாடசாலையில் இடம்பெற்ற சம்பவமொன்றினால் மன அழுத்தத்துக்கு ஆளான நிலையிலேயே மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்விடயத்தில் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று, சமூக நலன்விரும்பிகள் மற்றும் கல்விமான்களால், பிரதமர் அலுவலகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம், உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.கபில ஆகியோரிடமும், செந்தில் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த செந்தில் தொண்டமான், “பாடசாலை என்பது, பலவிதமான மாணவர்களும் வரும் இடமாகும். அவர்களை அரவணைத்து, முறையாக வழி நடத்துவதே, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கடமையாகும். சில இடங்களில் அந்தக் கடமைகளை அவர்கள் செய்யத் தவறும் பட்சத்தில், இவ்வாறான பாதிப்புகள் ஏற்படக்கூடும். 

இது விடயங்களில், உரிய தரப்பினர் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான், எதிர்காலங்களில் இவ்வாறான சம்பவங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.

“அத்துடன், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை முழுமையாக நம்பியும் அங்கு தமது பிள்ளைகள் அன்பும் அரவணைப்புடனும் நடத்தப்படுவார்கள் என்று எண்ணியுமே, பெற்றோர்கள் தமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதனைக் கட்டிக் காக்கவேண்டியது பாடசாலைச் சமூகத்தின் பொறுப்பாகும். 

அதேவேளை, பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள் எவ்வாறு மாணவர்களிடம் நடந்துகொள்கிறார்கள் என்பது பற்றிக் கண்காணிக்க வேண்டிய தேவை, அரசாங்கத்துக்கும் உள்ளது. அப்போது தான், இவ்வாறான சம்பவங்கள் நடந்தேறாமல் தடுக்க முடியும்.

தற்கொலை செய்து கொண்டுள்ள மாணவன், நன்றாகக் கல்வி பயின்று, சிறப்பான சித்திகளைப் பெற்றுக் கொண்டவர் என அறிய முடிகின்றது. வகுப்பு ரீதியாக முதலாவதாகவும் ஆண்டு ரீதியாக இரண்டாவது நிலையிலும் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரியவருகிறது. 

அவ்வாறிருக்கையிலேயே, அம்மாணவன் மீது ஆசிரியரால் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. இவ்வார்த்தைப் பிரயோகங்களே, மாணவனை இந்த முடிவுக்கு இட்டுச்சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

எனவே மாணவனின் விடயத்தில், உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் மூலம், மாணவனின் பெற்றோருக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad