கொழும்பு துறைமுக நகர் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்ததென்ன? - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

கொழும்பு துறைமுக நகர் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்ததென்ன?

(ஆர்.யசி)

இலங்கையின் அரசியல் அமைப்பு, பாராளுமன்ற மற்றும் நீதிமன்ற கட்டமைப்பிற்கு அப்பாலான அதிகாரங்களை கொழும்பு துறைமுக நகருக்கு கொடுப்பதன் மூலமாக நாட்டின் சட்டத்தை மீறிய அதிகாரங்கள் கொழும்பு துறைமுக நகருக்கு வழங்கப்படுகின்றதா என அச்சம் எழுவதாக சர்வதேச தூதுவர்களுடனான சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் கையாளப்பட்ட கொழும்பு துறைமுக நகர் திட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி, பிரான்சின் தூதுவர் எரிக் லாவெர்ட், இத்தாலியின் தூதுவர் ரீட்டா கியுலியானா மன்னெல்லா, ஜேர்மனியின் தூதுவர் ஹோல்கர் சியூபர்ட், ருமேனியாவின் தூதுவர் விக்டர் சியுஜ்தியா ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை காலை எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

அதேபோல் நேற்று மாலையில் அமெரிக்க தூதுவர் எலினா பி. டெப்லிட்ஸ், அவுஸ்திரேலிய துணை தூதுவர் அமண்டா ஜுவல், சுவிட்சர்லாந்து தூதவர் டொமினிக் ஃபர்க்லர், நோர்வே தூதுவர் ட்ரைன் ஜோர்ன்லி மற்றும் கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் ஆகியோரை எதிர்க்கட்சி தலைவர் சந்தித்திருந்தார்.

தற்போது உலகளாவிய ரீதியில் சகலரும் எதிர்கொள்ளும் கொவிட்-19 வைரஸ் பிரச்சினைகள்,நாடாக இந்த சவால்களில் இருந்து விடுபட சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளல் போன்ற விடயங்களை கலந்துரையாடியிருந்தனர்.

மேலும் தற்போது நாட்டில் ஜனநாயக செயற்பாடுகள் அடக்குமுறைக்கு உற்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்ததுடன் மக்களின் மனித உரிமைகள், சிவில் உரிமைகள், பொருளாதார உரிமைகள், சமூக உரிமைகள், அரசியல் உரிமைகள், சமய உரிமைகள் மற்றும் கலாசார உரிமைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், சர்வதேச அழுத்தங்களில் தொடர்ச்சியாக இலங்கை நெருக்கப்பட இதுவே காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை குறித்தும், ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளை இலக்கு வைத்த நாட்டின் உற்பத்தி வேலைத்திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும் தூதுவர்களுடன் கலந்துரையாடியிருந்த நிலையில் நாட்டில் அதில் பேசப்படும் கொழும்பு துறைமுக நகர் திட்டம் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடியுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர் திட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் தற்போதைய அரசாங்கம் கொழும்பு துறைமுக நகர் திட்டத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு என்ற ஒன்றை அமைத்து இலங்கையின் சட்ட முறைமைக்கும், நீதிக் கட்டமைப்பிற்கும், பாராளுமன்ற நிதி அதிகாரங்களுக்கும் அப்பால் சென்ற அதிகாரங்களை ஆணைக்குழுவிற்கு வழங்கி, துறைமுக நகர் முதலீட்டு வேலைத்திட்டங்கள், அதிகார கட்டமைப்பு என்பவற்றை சுயமாக தீர்மானிக்கும் விதத்திலான நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோல் நாட்டின் அதிகார எல்லையை மீறிய தீர்மானங்கள் எடுக்கும் சக்தி சீனாவுக்கு வழங்கப்படுகின்றதான அச்சம் எம்மத்தியில் எழுந்துள்ளதாகவும், இதனை பாராளுமன்றத்திலும் தாம் சுட்டிக்காட்டியுள்ளதாவும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரதிநிதிகள் சர்வதேச தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களிடம் எடுத்துரைத்துள்ளதாக சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எறான் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad