ரஞ்சனின் பதவி அறிவிப்பால் சபையில் அமளி துமளி - ஆளும், எதிர்க்கட்சிகளுக்கிடையே கடும் வாக்குவாதம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 7, 2021

ரஞ்சனின் பதவி அறிவிப்பால் சபையில் அமளி துமளி - ஆளும், எதிர்க்கட்சிகளுக்கிடையே கடும் வாக்குவாதம்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சபையில் வெளியிட்ட அறிவிப்பால் எதிர்க்கட்சியினர் சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஆளும், எதிர்க்கட்சிகளுக்கு இடையில் வாத பிரதிவாதங்களும் ஏற்பட்டன.

பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகர் அறிவிப்பை வெளியிட்டபோது, பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி ரஞ்ஜன் ராமநாயக்க பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதை இரத்து செய்வதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தேர்தல் ஆணையகத்தின் தலைவருக்கு தெரிவித்துள்ளதாகவும், இதற்கமைய அரசியலமைப்பின் பிரிவு 66 (d) யின்படி, கம்பஹா தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசனத்துக்கான ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் கூறினார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் அறிவிப்பை கேள்விக்கு உட்படுத்தினார். 

இதன்போது அவர் கூறியதானது, அரசியலமைப்பின் பிரிவு 66 (d) யின்படி ரஞ்ஜன் ராமநாயகவின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதாக கூறியுள்ளீர்கள். மூன்று மாதங்கள் அவர் பாராளுமன்றத்திற்கு வரவில்லை என்ற காரணத்தினை அடிப்படையாக வைத்தே இந்த தீர்ப்பை அறிவித்துள்ளீர்கள். ஆனாலும் ரஞ்ஜன் ராமநாயக்கவை சபைக்கு வரவழைக்கும் பிரேரணையை நாம் மூன்று வாரத்திற்கு முன்னரும் முன்வைத்தோம். எனினும் நீதிமன்ற விசாரணையில் உள்ள விடயமொன்றை கையாள முடியாது என அன்று நீங்கள் கூறினீர்கள். இப்போது தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் கேள்விக்கு உட்படுத்த முடியும். எனவே இந்த செயற்பாடுகள் முடிவுறும் வரையில் ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற பதவி தக்கவைக்கப்பட வேண்டும் என்றார்.

இதற்கு பதில் தெரிவித்த சபாநாயகர், இந்த விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த வழக்கின் பிரதி ஒன்றும் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு அமைய எடுக்கப்பட்ட தீர்மானமே இப்போது சபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது வெறுமனே பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை என்ற காரணத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு அறிவிக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. முதலில் நீதிமன்ற அறிவிப்பை நீங்களும் முழுமையாக வாசியுங்கள் என்றார்.

மீண்டும் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர், சபாநாகர் அவர்களே, நீங்கள் அறிவித்த தீர்ப்பு எவரதும் பரிந்துரைக்கு அமைய வாசிக்கவில்லை. அரசியல் அமைப்புக்கு அமைய நீங்களே முன்வைத்துள்ள அறிவிப்பே இது. அரசியலமைப்பின் பிரிவு 66 (d) யின்படி அவர் சமூகமளிக்கவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளீர்கள். அவரை பாராளுமன்றத்திற்கு அனுமதியுங்கள் என நாம் வலியுறுத்திய வேளையில் இதே அரசியலமைப்பின் பிரிவு 66 (e) அடிப்படையில் அதனை நிராகரித்தீர்கள். இப்போதும் அதே 66 (d) பிரிவை வைத்துக் கொண்டு அவரது பாராளுமன்ற பதவியை பறித்துள்ளீர்கள் என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, சபாநாயகர் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளீர்கள். இதனை இத்தோடு முடித்துக் கொண்டு பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு அல்லாது ஒவ்வொரு நாளும் ரஞ்ஜன் ராமநாயக்கவை பற்றி பேசிக் கொன்டிருந்தோமென்றால் எப்போது இதனை முடிப்பது. ரஞ்ஜன் ராமநாயக்க வெளியில் நீதிமன்றத்தை விமர்சிக்கின்றார், இவர்கள் அனைவரும் பாராளுமன்றத்திற்குள் இருந்துகொண்டு நீதிமன்றத்தை விமர்சிக்கின்றனர் என்றார்.

தான் தீர்ப்பு ஒன்றினை வழங்கி விட்டேன், இனிமேல் மாற்றிக் கொள்ள முடியாது என சாபாநாயகர் அறிவித்ததை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். 

சபாநாயகர் மிகவும் மோசமாக நடந்துகொள்வதாக விமர்சித்து மேசைகளில் தட்டி சபையில் பெரும் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பெரும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் சபை அமர்வுகளை முன்னெடுத்து செல்ல சபை முதல்வர் அறிவித்த போதிலும் சபையை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு செயற்பாடுகள் அமைந்தன. 

இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் அளவுக்கு அதிகமான ஜனநாயகமாக செயற்படுகின்றார் என ஆளும் கட்சியினர் கூறிய போது அதற்கு எதிர்ப்பை தெரிவித்து எதிர்க்கட்சியினர் சபாநாயகர் தீர்ப்பை கடுமையான விமர்சித்தனர். இதனால் சுமார் 20 நிமிடங்கள் அளவில் சபை செயற்பாடுகள் குழம்பியது.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad