மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என திட்டமிட்டது பா.ஜ.க. தான் என்றும் மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை சர்வதேச தரத்தில் அமையும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கு முன் தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மதுரை மற்றும் கன்னியாகுமரியில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
மதுரையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி அவர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணியின் முன்னணித் தலைவர்கள் பங்குபற்றினர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, 'தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தொலைநோக்குப் பார்வைக்கு மக்கள் எப்போதும் ஆதரவு அளிப்பர். நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்த ஆண்டு பட்ஜட்டிலும் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை கொல்லம் தொழில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை காட்டிலும், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 238 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையத்தள வசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எல்லோருக்குமான வளர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்டு இது போன்ற பல திட்டங்களை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 16 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் 2024 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கப்படும். ஜவுளித் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் மட்டும் 7 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.' என பிரதமர் தன்னுடைய பிரச்சாரத்தில் வாக்குறுதிகளை வழங்கினார்.
முன்னதாக நேற்று காலை நரேந்திர மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சென்று மக்களவை இடைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
No comments:
Post a Comment