கொரோனாவில் சிக்கி இந்தியாவை ஒத்ததாக இலங்கையும் மாறிய பின்னர் தலையில் கை வைத்துக் கொண்டு அழ முடியாது : காரைதீவு பிரதித் தவிசாளர் ஜாஹீர் ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 28, 2021

கொரோனாவில் சிக்கி இந்தியாவை ஒத்ததாக இலங்கையும் மாறிய பின்னர் தலையில் கை வைத்துக் கொண்டு அழ முடியாது : காரைதீவு பிரதித் தவிசாளர் ஜாஹீர் !

மாளிகைக்காடு நிருபர்

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா அலையில் நாட்டின் நிலையை கவனத்தில் கொண்டு பொதுமக்களாகிய நாம் சுகாதார தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும். எமது நாட்டின் நிலையும் அண்மைய நாடான இந்தியாவை ஒத்ததாக மாறிய பின்னர் தலையில் கைகளை வைத்துக்கொண்டு அழமுடியாது. நம்மை நாமே பாதுகாத்து கொள்ள முன்வர வேண்டும் என காரைதீவு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் தெரிவித்தார்.

இன்று (28) காலை மாளிகைக்காட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நாட்டின் சமகால நிலைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் பரவலாக அதிகரித்துவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் சுகாதாரத்துறை அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது.

எமது பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் மக்களை பாதுகாக்கவே அன்றி வேறில்லை. பண்டிகை காலத்தில் பொருட்கள் கொள்வனவின் போது பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதை வர்த்தகர்கள் உறுதிப்படுத்துவது அவசியமாக உள்ளது. 

பொது இடங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் மக்கள் நெரிசலாக கூடுவதை எவ்வாறு தவிர்க்கச் செய்வது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு, அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். 

இக்காலத்தில் வர்த்தகர்களும் பொது மக்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் குறித்து சுகாதார தரப்பினர் கூறும் அறிவுறுத்தல்களை ஏற்று நடந்து நாட்டையும் தம்மையும் பாதுகாக்க பொதுமக்கள் தியாக சிந்தனையுடன் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment