மாகாண சபை குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை கோருவது பிரயோசனமற்றது - நாட்டு மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் என்கிறார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் - News View

About Us

About Us

Breaking

Friday, April 2, 2021

மாகாண சபை குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை கோருவது பிரயோசனமற்றது - நாட்டு மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் என்கிறார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தல் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை கோருவதும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதும் பயனற்றது. அது குறித்து நாட்டு மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உருவாக்கத்திற்கு இந்தியா முன்னின்று செயற்பட்டது. காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்தி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்களை முழுமையாக செயற்படுத்துமாறு இந்தியா அண்மையில் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது.

மாகாண சபை தேர்தல் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை கோருவதும், அவர்களின் நிபந்தனைகளை செயற்படுத்துவதும் அவசியமற்றது. இலங்கை சுயாதீனமாd நாடு நாட்டுக்கு எது தேவை எது தேவையில்லை என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். 

கடந்த அரசாங்கம் மாகாண சபை தேர்தலை அரசியல் நோக்கிற்காக பிற்போட்டது. பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாநு நாட்டு மக்கள் எவரும் குறிப்பாக வடக்க மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கூட வீதிக்கு இறங்கி போராடவில்லை. மாகாண சபைகளினால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப் பெறவில்லை என்பதை இதனூடாகவே அறிந்து கொள்ள முடியும். 

அரசியல்வாதிகள் மாத்திரம் அரசியல் இலாபம் தேடிக் கொள்வதற்காக மாகாண சபை தேர்தல் குறித்து அக்கறை கொள்கிறார்கள்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நாட்டுக்கு அவசியமா, இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் முதலில் மக்களின் விருப்பத்தை கோர வேண்டும். மாகாண சபை தேர்தல் நாட்டுக்கு பயனற்றது என்பதே பெரும்பாலான மக்களின் அபிப்ராயமாக காணப்படும்.

எதிர்வரும் ஜூலை மாதம் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பினை இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது, ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கும் வரை மாகாண சபை தேர்தலை நடத்த கூடாது என ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்விடயம் குறித்து ஜனாதிபதி சிறந்த தீர்மானத்தை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment