பாடசாலையை மீள திறக்க கோரி கல்குடா வலயக் கல்வி பணிமனைக்கு முன்பாக போராட்டம்! - News View

About Us

About Us

Breaking

Thursday, April 22, 2021

பாடசாலையை மீள திறக்க கோரி கல்குடா வலயக் கல்வி பணிமனைக்கு முன்பாக போராட்டம்!

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஓமடியாமடு வேழமுகன் வித்தியாலயத்தை மீண்டும் திறக்கக் கோரி இன்று (வியாழக்கிழமை) கல்குடா வலயக் கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 38 மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையான வகுப்புகள் உள்ள நிலையில், கடந்த 03 வாரங்களாக குறித்த பாடசாலைக்கு அதிபர் ஒருவர் நியமிக்கப்படாமையினால் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதமையினாலேயே குறித்த பாடசாலை மூன்று வாரங்களாக திறக்கப்படாத நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கை முற்றாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களினால் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மாமா ஏன் சிறுபான்மையர் எமது கல்வி உரிமையை பறிக்கின்றீர் மற்றும் ஐனாதிபதி மாமா கல்வி கற்கும் உரிமை எமக்கு இல்லையா போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.

வலயக் கல்வி அலுவலகத்திற்கு செல்லும் பிரதான பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வலயக் கல்வி பணிமனை வரை பேரணியாக சென்று வலயக் கல்வி பணிமனை வளாகத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து வலயக் கல்வி பணிமனையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு பிரசன்னமாகியிருந்த பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி.எஸ்.கங்கேஸ்வரனால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment