மட்டக்களப்பில் மரமுந்திரிகைச் செய்கை என்ற போர்வையில் அபகரிக்கப்படும் மேய்ச்சல் தரைகள் : வெளியானது பல தகவல்கள் ! - News View

About Us

About Us

Breaking

Saturday, April 3, 2021

மட்டக்களப்பில் மரமுந்திரிகைச் செய்கை என்ற போர்வையில் அபகரிக்கப்படும் மேய்ச்சல் தரைகள் : வெளியானது பல தகவல்கள் !

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் மேய்ச்சல் தரைக்காண காணி அபகரிக்கப்பட்டுவரும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கையெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கந்தர்மல்லிச்சேனை பகுதியில் மேய்ச்சல் தரை காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை வளர்ப்பதில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இது தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் குறித்த பகுதியில் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

குறிப்பாக பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் குறித்த பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்த காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டபோதும் இதுவரையில் அது நிறைவேற்றப்படாத நிலையில் நேற்றையதினம் பாராளுமன்ற குழுவினர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டனர்.

ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம், மண்முனை மேற்கு, பட்டிப்பளை, போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலர் குறித்த பகுதிக்கு சென்றனர்.

குறித்த பகுதியில் சிவில் பாதுகாப்பு படையினரால் காடுகள் அழிக்கப்பட்டு முந்திரிகை செய்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1500 ஏக்கர் காணியில் இவ்வாறு முந்திரிகை செய்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் அனுமதியில்லாமலும் வன இலாகாவின் அனுமதியில்லாமலும் தன்னிச்சையான வகையில் சிவில் பாதுகாப்பு படையினர் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் 6000 முந்திரிகை மரங்களை நட்டுள்ளதாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு இரண்டு ஏக்கர்கள் வீதம் சிங்கள மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையாகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் விகிதாசாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

அப்பகுதியில் கால்நடைகளை மேய்ப்பவர்கள் மரக்கிளையொன்றை வெட்டினாலும் கைது செய்து நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லும் வன இலாகாவினர், தங்களது அனுமதியில்லாமல் காடுகள் அழிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் தொடர்பில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காதது அரசாங்கத்தின் சூழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பாதுகாக்க வேண்டிய வனங்கள் அழிக்கப்பட்டு திட்டமிட்ட குடியேற்றங்களை செய்வதற்கான நடவடிக்கையே இதுவாகும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கேசரி

No comments:

Post a Comment