நாட்டை பழி கொடுத்தாவது தங்களின் அமைச்சு பதவிகளை பாதுகாத்துக் கொள்வார்கள் : ஜனாதிபதி, பிரதமர் மஹிந்தவிடம் ஆலோசனைகளை பெற வேண்டும் - முருந்தெட்டுவே ஆனந்த தேரர் - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

நாட்டை பழி கொடுத்தாவது தங்களின் அமைச்சு பதவிகளை பாதுகாத்துக் கொள்வார்கள் : ஜனாதிபதி, பிரதமர் மஹிந்தவிடம் ஆலோசனைகளை பெற வேண்டும் - முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

(இராஜதுரை ஹஷான்)

அமைச்சரவை அமைச்சர்கள் நாட்டை பழி கொடுத்தாவது தங்களின் அமைச்சு பதவிகளை பாதுகாத்துக் கொள்வார்கள். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் நாடு பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் ஆகவே இவ்விடயம் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆலோசனைகளை பெற வேண்டும். கொவிட்-19 தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொண்டு நாட்டை பாதுகாக்கும் பொறுப்பினை பிரதமர் ஏற்க வேண்டும். அரச சேவை முழுமையாக பலவீனமடைந்துள்ளது. இந்நிலைமை தொடர்ந்தால் அரசும் பலவீனமடையும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் முதலாம் அலை தாக்கத்தின் போது அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் முறையாக பின்பற்றினார்கள். இதன் காரணமாக நெருக்கடி நிலையை அப்போது வெற்றிகொள்ள முடிந்தது. ஆனால் தற்போது அவ்வாறு கிடையாது.

கொவிட்-19 வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு பொறுப்புடன் செயற்படவில்லை. கொவிட்-19 வைரஸ் சாதாரண ஒரு தடிமன் என்று நாட்டு மக்கள் அலட்சியப்படுத்தும் அளவிற்கு சுகாதார அமைச்சு பொறுப்பற்ற தன்மையில் செயற்பட்டது. வைரஸின் தாக்கம் குறித்தும், முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் எவ்வித திட்டங்களும் வகுக்கப்படவில்லை.

புத்தாண்டு காலத்திற்கு பிறகு கொவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சுகாதார அமைச்சின் பலவீனத்தன்மை கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையின் ஊடாக வெளிப்பட்டு விட்டது.

அரச நிர்வாகம் பலவீனமடைந்துள்ளது. கிராமத்தில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவது சிறந்தது. அவ்வாறே அரச சேவை குறித்தும், அமைச்சர்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இவர்கள் அனைவரும் நாட்டை பழி கொடுத்தாவது தங்களின் அமைச்சு பதவிகளை பாதுகாக்க முயற்சிப்பார்கள்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாரதூரமான நிலை குறித்து அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என்பதை அவர்களின் செயற்பாடுகளின் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும். இந்தியாவின் தற்போதைய நிலைமை அபாயகரமானது. ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆலோசனைகளை பெற வேண்டும்.

கொவிட்-19 விவகாரம் தொடர்பிலான அனைத்து பொறுப்புக்களையும் ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க வேண்டும். நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அவருக்கு மாத்திரம் உண்டு.

நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டையும், மக்களையும் அவர் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை நாட்டு மக்களுக்கு முழுமையாக உள்ளது என்றார்.

No comments:

Post a Comment