கொவிட் நிலைமை தொடர்பில் மக்களுக்கு உண்மையான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதா - ஜே.சி.அலவத்துவல - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

கொவிட் நிலைமை தொடர்பில் மக்களுக்கு உண்மையான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதா - ஜே.சி.அலவத்துவல

(எம்.மனோசித்ரா)

தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனைகளில் அளவு குறைவடைந்தமையே தொற்றாளர்கள் எண்ணிக்கையும் குறைவடைந்தமைக்கான காரணமாகும். ஏன் இவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைவாக காண்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது? கொவிட் நிலைமை தொடர்பில் மக்களுக்கு உண்மையான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், கடந்த வாரங்களில் பி.சி.ஆர். பரிசோதனைகளில் அளவு குறைவடைந்தமையே மிகக் குறைந்தளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமைக்கான காரணமாகும். இவ்வாறான சூழலில் கடந்த காலங்களில் கொவிட் நிலைமை தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு உண்மை தரவுகளை வெளிப்படுத்தியதாக என்ற சந்தேகம் எழுகிறது. நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஏன் குறைவாகக் காண்பிக்கப்பட்டது ?

புத்தாண்டின் போது சுகாதார விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாவிட்டால் வைரஸ் பரவல் தீவரமடையும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்த போதிலும், அரசாங்கம் அதற்கான எவ்வித ஏற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை.

தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கையிலும் ஏற்பட்டு விடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறான நிலை தோன்றில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

ஆனால் தற்போது இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் இலங்கையிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இது மிகவும் அபாயமானதாகும்.

கொவிட் தொற்றின் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதால், அதனை நிவர்த்தி செய்வதாகக்கூறி அரசாங்கம் அதன் சகாக்களுக்கு இலாபத்தை ஈட்டிக் கொடுப்பதற்காக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கிறது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad