கொவிட் அச்சுறுத்தல் காரணமாக மே தின பேரணிகளை நாளை நடத்தாமலிருக்க பிரதான கட்சிகள் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக மே தின பேரணிகளை நாளை நடத்தாமலிருக்க பிரதான கட்சிகள் தீர்மானம்

(இராஜதுதுலைர ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக மே தினக் கூட்டங்களை நடத்துவதற்கும், பேரணிகளில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் நிகழ்நிலை ஊடாக நாளை மே தினக் கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆளும் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மே தினம் குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமை தொடர்ந்து சுகாதார பாதுகாப்பு காரணிகளை கருத்திற்கொண்டு இம்முறை மே தினக் கூட்டத்தையும், பேரணிகளையும் நடத்தாமலிருக்க கொவிட்-19 வைரஸ் ஒழிப்பு தேசிய கட்டுப்பாட்டு மையம் தீர்மானித்தது. இத்தீர்மானத்திற்கு அரசியல் கட்சிகள் அனைத்தும் இணக்கம தெரிவித்துள்ளன.

புத்தாண்டு காலத்திற்கு பின்னர் நாடு தழுவிய ரீதியில் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையினால் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் நாளையதினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் மே தினக் கூட்டங்கள், மற்றும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

மே தினக் கூட்டங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் நிகழ்நிலை ஊடாக மே தினக் கூட்டங்களையும், கலந்துரையாடல்களையும் நடத்த தீர்மானித்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி

இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நாளை காலை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மே தினக் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களை நினைவு கூறும் வகையில் மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மே தினத்தை முன்னிட்டு நிகழ்நிலை ஊடாக எவ்வித கூட்டங்களையும் ஏற்பாடு செய்யவில்லை. சுதந்திர கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன நாளை காலை 8.30 மணிக்கு கொள்ளுப்பிடியில் உள்ள காலஞ்சென்ற தொழில் அமைச்சரும், சுதந்திர கட்சியின் உறுப்பினருமான டி.பி. இலங்கரத்னவின் உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்துவார்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் 20 யோசனைகளை உள்ளடக்கிய ஒப்பந்தம் நாளை சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசனவினால் கைச்சாத்திடப்படவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி

மக்கள் விடுதலை முன்னணியினர் இம்முறை மே தினக் கூட்டத்தை நாளை கொழும்பிலும், நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திலும் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலையினை கருத்திற்கொண்டு கூட்டங்களை நடத்தும் தீர்மானம் முழுமையாக கைவிடப்பட்டன.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நிகழ்நிலை ஊடாக காலை காலை 10 மணிக்கு மே தினக் கூட்டத்தில் உரையாற்றுவார். மக்கள் விடுதலை முன்னணி, அல்லது பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் உத்தியோகப்பூர்வ முகப்பு புத்தகத்தில் மே தினக் கூட்டம் ஒளிப்பரப்பாகும்.

லங்கா சமசமாஜ கட்சி, இடதுசாரி மக்கள் முன்னணி, உள்ளிட்ட ஐந்து இடதுசாரி கட்சிகள்

லங்கா சமசமாஜ கட்சி, இடதுசாரி மக்கள் முன்னணி, உள்ளிட்ட ஐந்து இடதுசாரி கட்சிகள் நாளை நிகழ்நிலை ஊடாக மே தினக் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மாற்று வழிமுறைகளில் மே தினக் கூட்டத்தை நடத்துவது பயனற்றது. ஆகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மே தினக் கூட்டம் தொடர்பில் எவ்வித கூட்டங்களையும் எவ்வழிகளிளும் ஏற்பாடு செய்யவில்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment