மாகாண சபை சிக்கல் நிலைக்கு தீர்வு காண ஆறு மாத காலம் தேவை - புதிய அரசியலமைப்பிற்கான வரைவு ஜூனில் முழுமை பெறும் : பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, April 5, 2021

மாகாண சபை சிக்கல் நிலைக்கு தீர்வு காண ஆறு மாத காலம் தேவை - புதிய அரசியலமைப்பிற்கான வரைவு ஜூனில் முழுமை பெறும் : பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வரைவு எதிர்வரும் ஜூன் மாதம் முழுமையாக கிடைக்கப் பெறும். இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும். மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல் நிலைக்கு தீர்வு காண குறைந்த பட்சம் 6 மாத காலம் தேவைப்படும் என எதிர்பார்க்கிறோம். நடைமுறையில் உள்ள தேர்தல் முறையில் காணப்படும் சிக்கல் நிலைமை குறித்து ஆராய 15 பேர் கொண்ட குழு நியமிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பினை உருவாக்குவோம் என நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பல ஏற்பாடுகள் தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமாற்றதாக உள்ளது. 

உத்தேச புதிய அரசியலமைப்பிற்கான வரைபை தயாரிக்க ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் 9 பேர் உள்ளடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவினரிடம் பிரதான அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் அரசியலமைப்பு தொடர்பிலான யோசனைகளை முன்வைத்துள்ளார்கள். அரசியமைப்பு தொடர்பில் மக்களின் அபிப்ராயம் கோரப்பட்டுள்ளன.

அனைத்து தரப்பினரது யோசனைகளையும் உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பிற்கான வரைவு எதிர்வரும் ஜூன் மாதம் முழுமையாக கிடைக்கப் பெறும்.

தேர்தல் முறைமையில் முழுமையாக மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உட்டபட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதான யோசனையாக காணப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமை நிலையான அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு சாதகமாக அமையவில்லை. 2020ஆம் ஆண்டு இடம்பெற்று முடிந்த பொதுத் தேர்தலிலும் இத்தன்மை காணப்படுகிறது. விருப்பு வாக்குமுறைமை அரசியல் கட்சிகளுக்கிடையில் மாத்திரமல்ல, அரசியல் கட்சிக்குள்ளும் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து, குறைபாடுகளுக்கு தீர்வு காண பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி 15 பேரை கொண்ட குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

நல்லாட்சி அரசாங்கம் குறுகிய அரசியல் தேவைக்காக மாகாண சபை தேர்தலில் குழப்பகரமான சூழலை ஏற்படுத்தியது.

2017 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் தொடர்பிலான தேர்தல் முறைமை இரத்து செய்யப்பட்டன. இதற்கு பதிலாக பிறிதொரு தேர்தல் முறைமை அப்போது அறிமுகப்படுத்தப்படவில்லை.

மாகாண சபை தேர்தலில் எல்லை நிர்ணய பிரச்சினை பிரதானமாக கருதப்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண எல்லை நிர்ணய குழுவினை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல் நிலைக்கு தீர்வு காண குறைந்தது 6 மாத காலம் தேவை என எதிர்பார்க்கப்படுகிறது. குழப்பகரமான சூழ்நிலையில் தேர்தலை நடத்த முடியாது. சிறந்த தீர்வு கண்ட பின்னர் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment