பணத்துக்கோ, பதவிக்கோ அலையமாட்டேன், நான் உயிருள்ளவரை எவருக்கும் துரோகம் செய்யமாட்டேன் - மக்களுக்கு சரியான நடுநிலையான செய்திகளை வழங்குவதே ஊடகங்களின் தர்மம் : வீ. ஆனந்தசங்கரி - News View

About Us

About Us

Breaking

Monday, April 26, 2021

பணத்துக்கோ, பதவிக்கோ அலையமாட்டேன், நான் உயிருள்ளவரை எவருக்கும் துரோகம் செய்யமாட்டேன் - மக்களுக்கு சரியான நடுநிலையான செய்திகளை வழங்குவதே ஊடகங்களின் தர்மம் : வீ. ஆனந்தசங்கரி

பணத்துக்கோ, பதவிக்கோ அலையமாட்டேன் எத்தகைய நான் உயிருள்ளவரை எவருக்கும் துரோகத்தை செய்யமாட்டேன் உறுதியாக மக்கள் நம்பலாம். அரசியலை தொண்டாகவும் நம் கடமையாகவும் செய்கின்றேனே அன்றி வியாபாரமாக அல்ல என்பதனை அனைவரும் அறிய வேண்டும். எனவே பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் எனது சேவையை மக்கள் இழந்து விடாது காக்க வேண்டிய பொறுப்பு மற்றும் மக்களுக்கு சரியான நடுநிலையான செய்திகளை வழங்குவதே ஊடகங்களின் தர்மமாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் இணையத்தளங்களும் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன. சிலர் இதை முறையற்ற விதத்தில் தவறாக பயன்படுத்துவது சமூகத்திற்கு நல்லதல்ல. சிலருக்கு இதுதான் வாழ்வாதாரம். சிலருக்கு பொழுதுபோக்கு! சிலருக்கு வரைவிலக்கணமின்றி எல்லோர் தலையிலும் குட்டிப் பார்ப்பது! சிலர் இவற்றை உபயோகித்து சிலரை தூக்கி வைப்பதும், வேறு சிலரை காலில் போட்டு மிதிப்பதும் வழக்கமாகிவிட்டது. சுய மகிழ்ச்சிக்காக ஒருவர் எதையும் செய்யலாம். ஆனால் மற்றவர்களை துன்பப்படுத்துவது நியாயமற்றதாகும்.

நான் அரசியலில் என்றும் பிழையான வழியை பின்பற்றியவனும் அல்ல, திட்டமிட்டு எதையும் செய்தவனும் அல்ல, எவர் ஏற்றாலும் சரி ஏற்காவிட்டாலும் சரி உண்மையாதெனில் ஒரு சிலரின் சுயநலப்போக்கால் எமது பிரச்சனைகள் நீடித்துக் கொண்டு போய்விட்டது.

தமிழினத்திற்கு அத்தியாவசியமான ஒரு தேவை ஏற்பட்டபோது எதுவித தப்பும் கூற முடியாத தலைவர்களாகிய தந்தை செல்வநாயகம், தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம், மலையக தலைவர் தொண்டமான் ஆகியோர் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணிதான் தமிழர்களின் தேசிய அமைப்பு என்ற பெயரை பெறத்தகுதி பெற்றதாகும். தனிப்பட்ட முறையில் எவரேனும் அல்லது நடைமுறையில் இயங்குகின்ற அல்லது ஏதாவது அரசியல் கட்சிகளை குறிவைத்து நான் எதையும் கூறவில்லை. பல சந்தர்ப்பத்தில் தீர்வு வந்து கதவில் தட்டியதை அனேகர் அறியமாட்டீர்கள்.

என்னைப்பற்றி ஏறக்குறைய 30 ஆண்டுகள் எதுவிதத்தில் நியாயப்படுத்த முடியாத விதத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிக மோசமாக செய்யப்பட்ட பிரச்சாரம்தான் நீங்கள் அறிந்ததுண்டு. உண்மை அதல்ல. சில உண்மையான விடயங்களை இக்கட்டத்தில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

பொய், களவு, ஏமாற்று போன்ற எதுவித குணாதிசயங்கள் கடு அளவும் இல்லை என்பதால் நான் எழுதப்போவது முற்று முழுதாக உண்மையே அன்றி எதுவித குளறுபடியுமில்லாமல் மக்களாகிய நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்பது மட்டுமல்ல உங்கள் சந்தேகங்களை என்னுடன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.

2004ம் ஆண்டு பொதுத் தேர்தலுடன் விடுதலைப் புலிகள் உட்பட சகலரின் ஒத்துழைப்புடன் எமது பிரச்சனை முற்றுமுழுதாக இல்லாவிட்டாலும் பெருமளவில் தீர்க்கக்கூடிய அரிய ஒரு சந்தர்ப்பம் வந்ததை அனேகர் அறியமாட்டீர்கள். 

அமரர் அமிர்தலிங்கம் இருக்கும் வரை பயபக்தியுடன் செயற்பட்ட தலைவர்களில் சிலர் தான்தோன்றித்தனமாக தம் இஸ்டப்படி நடந்தமையால் என்றோ பிரச்சனை தீர்ந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் காப்பாற்றியிருக்க முடியும்.

யார்? யார்? என்ன செய்தார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்பவில்லை. இன்று தீவிரமாக இயங்குவதாக காட்டிக்கொள்ளும் தலைவர்கள் தம் மனசாட்சியை தொட்டு தம்மை தாமே கேட்க வேண்டிய கேள்விகள் பல உண்டு.

அனேகர் நினைப்பது போல் பல கட்சிகளின் முன்னனி தலைவர்கள் தாம் வகிக்கும் பதவிகளுக்கு தகுதியற்றவர்களாவர். தந்தை செல்வநாயகம், தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம், மலையக தலைவர் தொண்டமான் அவர்களால் உருவாக்கப்பட்ட தேசிய கட்சிக்கு நடந்தது என்ன? அதை ஒழித்தவர்கள் யார்?

மிக இலகுவாக தட்டிக்கேட்க ஆளில்லாமையால் என் மீது பழி சுமத்தி தாம் தப்பிக் கொண்டனர். ஆனால் பல விடயங்கள் சம்பந்தமாக என்னால் விளக்கம் தந்திருக்க முடியும். தப்பிக்க முடியும். எமக்குள் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இக் கட்டத்தில் நான் எவர் மீதும் குற்றம் சுமத்தவில்லையே அன்றி, எதுவித குற்றமும் நான் செய்தவனல்ல.

தமிழர் விடுதலைக் கூட்டணி முற்றுமுழுதாக தடம்புரண்டது 2004ம் ஆண்டு 2ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில். வாக்காளர்களின் சகல அடிப்படை உரிமைகள் அத்தனையும் முற்றுமுழுதாக மீறப்பட்டது அத்தேர்தலில்தான். இந்த உண்மை வெளிக்கொண்டரப்படாமையே எம் இனத்தின் பல தரப்பட்ட இழப்புகளுக்கு காரணமாக அமைந்தது. எமது தலைவர்கள் விடுதலைப் புலிகளையும், மாணவர்களையும் உபயோகித்து பெரு வெற்றி ஈட்டியதில் விடுதலைப் புலிகளின் அழிவிற்கும் காரணமாக அமைந்தனர்.

அமரர் அமிர்தலிங்கம் இருக்கும் வரை பெட்டிப்பாம்பாக இருந்தவர்கள் சுயரூபத்தை காட்ட தொடங்கினர். பலருக்கு தகுதியிருந்தும் ஒரு நபர் ஒற்றுமை கருதி அமிர்தலிங்கம் இடத்திற்கு தேசியப்பட்டியலில் நியமிக்கப் பெற்றார். அதன் பின் அதே நபர் மீண்டும் தேசியப்பட்டியலில் நியமிக்கும்படி அடம்பிடித்தார்.

நியமன உறுப்பினராக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்த நீலம் திருச்செல்வம் ஐந்து பக்கத்தில் கடிதம் எழுதி தன் பதவியை இராஜினாமா செய்து மீண்டும் அதே நபரை நியமிக்கும்படி வேண்டியிருந்தேன். துரதிஸ்டவசமாக அவர் கொல்லப்பட்ட பின் அதே நபரை பலரின் எதிர்ப்புக்கு மத்தியில் நானே முன்நின்று மீண்டும் அவரை நியமன உறுப்பினராக தெரிவு செய்தேன்.

அந்த நேரத்தில் இவரிலும் கூடிய தகுதியுடையவர்கள் பலர் இருந்தனர். தொடர்ந்து வந்த பாராளுமன்ற தேர்தலில் முதல் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று அடம்பிடித்தார். நியாயமற்ற அவரின் கோரிக்கைக்கு எவரும் செவிசாய்க்கவில்லை. பல தந்திரங்களை கையாண்டு போட்டியிட்டு என்னிலும் குறைந்த வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்ற அவர் அதை ஒரு பெரும் தோல்வியாக எடுத்துக்கொண்டு பல நாசவேலைகளில் ஈடுபட்டார். அத்தேர்தலில்தான் தமிழ் பிரதேசத்தில் ஜனநாயகம் தடம்புரண்டதாகும்.

இந்த உண்மையை பொதுமக்களுக்கு ஊடகங்கள் தெரியப்படுத்தியிருந்தால் இனப்பிரச்சனை என்றோ தீர்ந்திருக்கும். பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரும், உடமையும் காப்பாற்றப்பட்டிருக்கும். 

அடுத்து வரப்போவது தமிழ் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டு தேர்தலின் போது 22 அசனங்களை அபூர்வமாக கைப்பற்றியது எவ்வாறு? ஜனநாயக உலகை அதிர வைத்த வரலாறு தொடரும். அதில் இது முதல் விடயமாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 22 பேர் எவ்வாறு தெரிவானார்கள் என்ற உண்மையை நன்கு அறிந்திருந்த ஊடகங்கள் வெளிக்கொண்டுவராமையே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பெரும் சலுகையாக அமைந்தது. அன்று வெளியிடத் தவறியமைக்கு நியாயப்படுத்தக் கூடிய காரணம் இருந்திருப்பின் இந்த காலகட்டத்திலாவது வெளியிட்டிருக்கலாம்.

எனவே தப்பான வழிநடத்தலால் பல்லாயிரக்கணக்கான இலட்சியவாதிகளை பலி கொடுத்துள்ளோம். முப்பது வருடங்களாக நான் படும் அவமானத்திற்கு விரைவில் ஓர் முடிவு வர வேண்டும் என ஆண்டவனை வேண்டுகின்றேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment