ஒரே நாட்டில் இரு சட்டங்களை தோற்றுவிக்கும் அபாயத்தில் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கான புதிய சட்டமூலம் என்கிறார் அஜித் பி பெரேரா - News View

Breaking

Post Top Ad

Sunday, April 4, 2021

ஒரே நாட்டில் இரு சட்டங்களை தோற்றுவிக்கும் அபாயத்தில் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கான புதிய சட்டமூலம் என்கிறார் அஜித் பி பெரேரா

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுக நகரத்தின் பொருளாதார ஆணைக்குழுவின் அதிகாரங்கள் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்ட மூலமானது ஒரே நாட்டில் இரு சட்டங்களை தோற்றுவிக்கும் அபாயமுடையதாகும். எனவே இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீள் அவதானம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், கொழும்பு துறைமுக நகரத்தின் பொருளாதார ஆணைக்குழு தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான புதிய சட்டமூலம் வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த கலந்துரையாடல் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இது தொடர்பில் மதத் தலைவர்கள் உள்ளிட்ட சகல பிரஜைகளும் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த சட்டமூலத்தில் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கு பதிலாக ஒரே நாட்டில் இரு சட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பால் மிகப் பாரதூரமான சட்டமூலமாக இது காணப்படுகிறது. இந்த சட்ட மூலத்தில் சட்டத்துறைசார் தொழிலுக்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

வழமையான நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சட்டத்தரணிகளுக்கு காணப்படும் வரப்பிரசாதங்கள் துறைமுக நகரத்துடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளில் வழங்கப்படவில்லை. அதற்கமைய கொழும்பு துறைமுக நகரத்திற்குள் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் ஏனைய பிரதேசங்களில் பின்பற்றப்படும் சட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடையவையல்ல.

நாட்டிற்கு பொதுவான சட்ட கட்டமைப்பிற்கு அப்பாற் சென்று தனித்து இயங்குவதற்கான அதிகாரம் குறித்த சட்ட மூலத்தின் மூலம் இந்த ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெறும். இதனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. 

இதே நிலைமை தொடருமாயின் ஒரே நாட்டுக்குள் இரு சட்டங்கள் உருவாகுமாயின் ஒரே நாட்டுக்குள் இரு நாடுகள் உருவாகக் கூடும். சீனா - ஹொங்கொங், அல்லது சீனா - மெகாவ் போன்ற நிலைமை இலங்கையில் உருவாகக் கூடும்.

துறைமுக அபிவிருத்திக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும் இதன் மூலம் நாட்டுக்கு நெருக்கடி ஏற்படுமாயின் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. எனவே இந்த சட்ட மூலத்தை நிறைவேற்ற முன்னர் அதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

இந்த சட்டத்தின் மூலம் துறைமுக நகரத்திற்குள் சூது விளையாட்டை ஆரம்பிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதனுடன் விபச்சாரமும் அதிகரிப்பதையும் தடுக்க முடியாமல் போகும்.

உலகின் பல நாடுகளிலும் இதுவே இடம்பெறுகிறது. எனவே இந்த சட்ட மூலம் தொடர்பில் மீள ஆராயுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம். காரணம் இந்த சட்டமூலம் நாட்டை காட்டிக் கொடுப்பதற்கு ஒத்ததொன்றாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad