அரசியல் பழிவாங்கல்களை நிறுத்தி அரசாங்கம் அனைவருடனும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும் : நாங்கள் ஒன்றுபட்டால் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுக்கலாம் - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

அரசியல் பழிவாங்கல்களை நிறுத்தி அரசாங்கம் அனைவருடனும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும் : நாங்கள் ஒன்றுபட்டால் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுக்கலாம் - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு எதிர்கொண்டுள்ள சவால்மிக்க நிலைமைக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதாக இருந்தால் அனைவரும் ஒரே தேசமாக இன மத, அரசியல் பேதங்களைவிட்டு ஒன்றாக கைகோர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு முன்மாதிரியாக அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான பழிவாங்கல்களையும் நிறுத்தி அனைவருக்கும் நற்புறவான நேசக்கரங்களை அரசாங்கம் ஆரம்பமாக நீட்ட வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகரமாக முகம்கொடுப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியதன் தேவை குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் நாடு எதிர்கொண்டுள்ள சவால்மிக்க நிலைமைக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதாக இருந்தால் நாங்கள் அனைவரும் ஒரே தேசமாக இன மத, அரசியல் பேதங்களைவிட்டு ஒன்றாக கைகோர்த்துக் கொள்ள வேண்டியது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும்.

இதற்கான முன்மாதிரியை ஆரம்பமாக வழங்குவதற்கு நாட்டில் ஆளுங்கட்சி மற்றும் அரச தலைவர் முன்வர வேண்டும். அதனடிப்படையில் அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான பழிவாங்கல்களை நிறுத்தி அனைவருக்கும் நற்புறவான நேசக்கரங்களை ஆரம்பமாக நீட்ட வேண்டும்.

என்றாலும் இவ்வாறான சூழலையை ஏற்படுத்த வேண்டி இருக்கின்ற போதும், நாட்டில் இடம்பெறுகின்ற சில சம்பவங்கள் தொடர்பில் எங்களுக்குள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றது.

சத்திர சிகிச்சை ஒன்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோவின் சகோதரியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸுக்கு அழைத்து 05.00 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தியதியது ஒரு தார்மிக செயலாக கருத முடியாது. இது மனித உரிமையை மீறும் செயலாகும்.

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்லும் முறையை கவனிக்கும்போதும், அவ்வாறான நிலைமையையே காணக்கூடியதாக இருக்கின்றது. ரிஷாத் பதியுதீன் இதற்கு முன்னரும் பல தடவைகள் கைது செய்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கமையவும் அவருக்கு எதிராக குறிப்பிட்டதொரு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருப்பதை, காணக்கூடியதாக இல்லை.

இவ்வாறான சூழலில் அவருக்கு எதிராக தற்போது ஏதாவது குற்றச்சாட்டு தெரிவிக்க நியாயமான காரணம் இருக்குமானால், அதனை தாமதிக்காது நீதிமன்றம் ஒன்றுக்கு சமர்ப்பித்து நியாயமான வழக்கு விசாரணை ஒன்றுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்த அதிகாரிகளின் பொறுப்பாகும்.

மேலும், ரிஷாத் பதியுதீனை கைது செய்யும்போது குறித்த துறையினர் செயற்பட்டிருக்கும் சம்பிரதாய விராேத செயலை ஒருபோது ஏற்றுக் கொள்ள முடியாது. நள்ளிரவு 02.00 மணியளவில் சபாயகருக்கும் அறிவிக்காமல், இவ்வாறான நடவடிக்கை மேற்கொண்டமை தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும். அது பாராளுமன்றத்துக்கும் மேற்கொள்ளப்படும் அவமானமாகும். இதன் மூலம் சபாநயகருக்கும் அவமானத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

எனவே இவ்வாறான முட்டாள்த்தனமான செயல்கள் மூலம் ஏற்படுவது, பயங்கரவாதத்துக்கு எதிராக எமது நாட்டில் பாதுகாப்பு பிரிவு மற்றும் நீதியை வழங்குவதற்கு தலையிடும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு ஆளாகின்றதாகும்.

அதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட இந்த நாட்டில் ஏற்பட்ட பாரிய குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட அனைத்து விசாரணைகள் மற்றும் ஏனைய சட்ட நடவடிக்கைகளுடன் குறுகிய அரசியல் நோக்கங்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என நாட்டில் இருக்கும் அனைத்து தரப்பினரிடமும் பொறுப்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அதேபோன்று நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்பு உட்பட மக்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முறையாக கவனம் செலுத்தி, நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக தேவையான நடவடிக்கைகளை தாமதிக்காமல் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நாங்கள் ஒன்றுபட்டால் எந்தவொரு சவாலுக்கு எமக்கு முகம்கொடுக்கலாம். அதற்காக ஜனாதிபதி தலைமைத்துவம் வழங்க வேண்டும். அழிவடைந்த நாடுகள் கட்டியெழுப்பப்படுவது இந்த முறையிலாகும்.

No comments:

Post a Comment