(எம்.எம்.சில்வெஸ்டர்)
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாமுக்கு புதுமுக இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம உள்வாங்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளராக விளங்கும் லசித் எம்புல்தெனிய உபாதைக்குள்ளாகியுள்ளதால் அவரின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் தேவைப்பட்ட நிலையிலேயே பிரவீன் ஜயவிக்ரம புதுமுக வீரராக இலங்கை கிரிக்கெட் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
முதற்தர கிரிக்கெட் போட்டிகளின் 18 இன்னிங்ஸ்களில் பந்து வீசியுள்ள பிரவீன் ஜயவிக்ரம 40 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன், 69 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தியமை இன்னிங்ஸ் ஒன்றுக்கான அவரின் சிறந்த பந்துவீச்சு பெறுதியாகும்.
இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக கிரிக்கெட் தொடரில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்த இளம் வீரரான பெத்தும் நிஸ்ஸங்கவின் உபாதை குணமாகியுள்ளதை அடுத்து, அவரும் இலங்கை கிரிக்கெட் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் குழாம் எழுத்துமூல அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கண்டி பல்லேகலையில் நடைபெறவுள்ள இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
No comments:
Post a Comment