றிஷாட் பதியுதீனின் கைது மிகவும் கண்டனத்துக்குரியது - கிண்ணியா நகர சபை உறுப்பினர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 27, 2021

றிஷாட் பதியுதீனின் கைது மிகவும் கண்டனத்துக்குரியது - கிண்ணியா நகர சபை உறுப்பினர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கைது மன வேதனையானதும் கண்டனத்துக்குரியதும் என மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம்.எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

நேற்று (26.04.2021) கிண்ணியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் அவை நிறைவேற்றப்படாத நிலையில் துறைமுக நகரம், சீனி இறக்குமதி, கொரோனா அனர்த்தம், ஈஸ்டர் தாக்குதல் போன்ற நிகழ்வுகளால் தற்போது பெரும் விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளாகியுள்ளதோடு அரசாங்க கூட்டணிக்குள்ளும் பிளவுகள் ஏற்பட்டுள்ளன.

இவற்றை திசை திருப்புவதற்காகவும் பெரும்பான்மை மக்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காகவுமே இவ்வாறான கைதுகள் அறங்கேற்றப்படுகின்றன என பல்வேறு கருத்துகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

ரிஷாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் திணைக்களம், ஆணைக்குழுக்கள் நீதிமன்றங்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் விசாரணைகள் நடைபெற்றன.

அவ் விசாரணைகளுக்கு அவராலும் அவரது குடும்பத்தினராலும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட்ட போதிலும் அவர் மீதான எந்த குற்றச்சாட்டுகளிலும், அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்படவில்லை. ஆனாலும் சென்ற வருடம் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

மேலும் அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் தான் விடுபட வேண்டும் என்பதற்காக அனைத்து விசாரணைகளையும் விரைவு படுத்துமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அண்மையில் மனு மூலமான கோரிக்கையும் விடுத்திருந்தார்.

ஈஸ்டர் தாக்குதலோடு எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்தும் வேண்டுமென்று அதிகாலை நோன்பு நோற்க தயாராக இருந்த வேளை சட்ட நியதிகளுக்கும் மனித நேயத்திற்கும் அப்பால் அவர் கைது செய்யப்பட்ட முறைமையானது மனிதாபிமானமற்ற, மன வேதனையான கண்டனத்திற்குரிய செயலாகும்.

ஒரு கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் இவ்வாரான கைதுகள் இந்நாட்டின் ஜனநாயகம், சட்டவாட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

எனவே ரிஷாத் பதியுதீன் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு பனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதற்கும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad