(செ.தேன்மொழி)
வீதி விபத்துக்கள் காரணமாக எட்டு நாட்களுக்குள் 75 பேர் மரணித்துள்ளதுடன், ஆயிரம் பேர் வரையில் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வீதி விபத்துக்கள் காரணமாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று பேரும் பயணிகள் மூன்று பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 13 ஆம் திகதி முதல் இதுவரையில், வீதி விபத்துக்கள் காரணமாக 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது ஆயிரம் பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், வாகன விபத்துகளினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக பொலிஸார் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது மது போதையிலும், போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகள் தொடர்பிலும், போக்குவரத்து சட்ட விதிகளுக்கு புறம்பாக வாகனங்களை செலுத்தும் சாரதிகள் தொடர்பிலும், அதி கூடிய வேகத்தில் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பிலும் பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.
எனினும், பொதுமக்கள் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சாரதிகள் மற்றும் பயணிகள் கவனத்துடன் செயற்பட்டாலே வீதி விபத்துகளினால் ஏற்படும் இழப்புகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment