தமிழ் - சிங்கள புது வருடத்தையொட்டி, போதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்யும் விசேட நடவடிக்கையில் 783 பேரை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதில் 534 மோட்டார் சைக்கிள் சாரதிகள் உள்ளடங்குகின்றனர். அதற்கமைய புது வருட தினமான ஏப்ரல் 14, மு.ப. 9.00 மணி முதல் அடுத்த நாள் (15) அதிகாலை 6.00 மணி வரை நாடு முழுவதும் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், போதையில் வாகனம் செலுத்திய 783 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
போதையில் வாகனம் செலுத்தி கைது செய்யப்பட்ட சாரதிகளின் விபரம் வருமாறு
வாகனங்கள் எண்ணிக்கை
மோட்டார் சைக்கிள் 534
முச்சக்கர வண்டி 180
கார் 43
பஸ் 02
இரட்டைப் பயன்பாட்டு வாகனங்கள் 11
லொறி 10
வேறு 03
இது தவிர வெவ்வேறு போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 2,844 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 48 மணித்தியாலங்கள் விபத்துகள் தொடர்பில் 30 பேர் மரணமடைந்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் விபத்துகள் தொடர்பில் 16 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், நேற்றையதினம் (15) மாத்திரம் இடம்பெற்ற விபத்துகளில் 08 பேர் மரணமடைந்துள்ளதாகவும் ஏனைய 08 பேரும் நேற்றுமுன்தினம் மற்றும் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்துகளின் போது காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக குறித்த 16 பேரில் 12 பேர் மோட்டார் சைக்கிள் சாரதிகள் என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் நேற்றையதினம் விபத்துகளில் 80 பேர் காயமடைந்துள்ளதோடு, நேற்றுமுன்தினம் 74 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், கடந்த 48 மணித்தியாலங்களில் 150 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வருடத்தில் அதிக விபத்துகள் இடம்பெறும் தினங்களாக சிங்கள - தமிழ் புத்தாண்டு காலப்பகுதியாக காணப்படுவதாக, புள்ளிவிபரங்கள் காண்பிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், போக்குவரத்து விதிமுறைகளைப் பேணி அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment