தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் : காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஓட்டு போடலாம் - அடுத்த முதல்வர் யார்? - 158 கோடி ரூபா பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றல் - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் : காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஓட்டு போடலாம் - அடுத்த முதல்வர் யார்? - 158 கோடி ரூபா பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றல்

தமிழக சட்டசபைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போடலாம்.

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர். கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் அனல்பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

பின்னர் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நேற்று இரவே சென்று வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் 6ஆம் திகதி (இன்று) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 

கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள், வாக்குச்சாவடிக்கு வரும்போது உடல் வெப்பத்தில் மாறுபாடு ஏற்பட்டு தொற்றுக்கான சந்தேகம் உள்ளவர்கள் ஆகியோருக்கு கடைசி ஒரு மணி நேரத்தில் முழு கவச உடையுடன் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. இது சிறப்பு ஏற்பாடாகும்.

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண்கள்; 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர் பெண்கள்; 7,192 பேர் 3-ம் பாலினத்தவர். அத்தனை வாக்காளர்களும் வாக்களிக்க ஏற்பாடுகள் தயார். தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் போல் இந்த தேர்தலிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்களுடன் விவிபேட் எந்திரம் (அளித்த வாக்கை உறுதி செய்யும் எந்திரம்) பொருத்தப்பட்டு இருக்கும். 1 லட்சத்து 29 ஆயிரத்து 165 வாக்களிக்கும் எந்திரங்களும், 91 ஆயிரத்து 180 கட்டுப்பாட்டு எந்திரங்களும், அதே எண்ணிக்கையில் விவிபேட் எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 937 ஆகும். 4 லட்சத்து 17 ஆயிரத்து 521 தேர்தல் பணியாளர்கள் பணியில் உள்ளனர். வாக்குச்சாவடி பாதுகாப்பிற்காக போலீஸ் மற்றும் போலீஸ் அல்லாத படை வீரர்கள் 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் உள்ளனர். அதில் 23 ஆயிரத்து 200 மத்திய ஆயுதப்படை போலீசாரும், தமிழக போலீசார் 74 ஆயிரத்து 163 பேரும் அடங்கும்.

மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் 50 சதவீதம், அதாவது 46 ஆயிரத்து 203 வாக்குச்சாவடிகளில் வெப்-காஸ்டிங் என்ற தொழில்நுட்பம் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். 10 ஆயிரத்து 813 பதற்றமுள்ள வாக்குச்சாவடிகள், 537 மிகவும் பதற்றமுள்ள வாக்குச்சாவடிகளில் இருந்து, அங்குள்ள வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு, 8,014 தேர்தல் நுண் பார்வையாளர்கள் அளித்துக்கொண்டிருப்பார்கள்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக 3,538 ‘பிரெய்லி’ வாக்களிக்கும் எந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்காக 60 ஆயிரத்து 884 வாக்காளர் பிரெய்லி தகவல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அடையாள அட்டை இல்லாமலும் கூட ஓட்டு போடலாம். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாக வேண்டும்.

இதில் சந்தேகம் இருந்தால் 1950 என்ற எண்ணுக்கு எஸ்.டி.டி. எண்ணுடன் சேர்த்து டயல் செய்து கேளுங்கள். இந்த எண்ணிற்கு அதிக போன் அழைப்பு வருவதால் சற்று காத்திருந்து தகவலை அறியலாம்.

இந்த முறை வாக்காளர்களுக்காக சில இணையதள வசதியை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி இருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கான இணையதளத்தில் சக்கர நாற்காலி வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை சரிபார்க்கலாம். ஏற்கனவே உள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்திற்கு (elections.tn.gov.in) சென்று pwd என்ற தலைப்பில் கிளிக் செய்து அந்த வசதிகளைப் பெறலாம். queue என்ற தலைப்பை கிளிக் செய்தால் வாக்குச்சாவடியில் உள்ள மக்கள் கூட்ட நெரிசல் பற்றி அறிந்து நாம் ஓட்டு போடச் செல்லும் நேரத்தை கணித்துக்கொள்ளலாம்.

சென்னை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடவடிக்கைகளுடன் ஊபர் செயலியை இணைத்திருக்கிறோம். அதன் மூலம் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இலவசமாக பயணித்து வாக்குச்சாவடிக்கு வந்து (2 கி.மீ. தூரத்திற்குள்) வாக்களிக்கலாம். அவர்களுக்கு உதவியாக வேண்டுமானால் ஒருவர் வரலாம். எத்தனை பேர் வாக்களித்துள்ளனர் என்ற தகவலைப் பெறவும் அதில் வசதி செய்யப்பட்டுள்ளது.

சி-விஜில் மூலம் 3,991 புகார்கள் வந்தன. அதிக புகார் வரப்பெற்ற மாவட்டங்களில் கரூர் முதலிடம் வகிக்கிறது. அடுத்ததாக, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், சென்னை ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் ஓட்டுக்காக 1 லட்சத்து 4 ஆயிரத்து 282 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. அதில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 202 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன. அதுபோல மாற்றுத்திறனாளிகளில் 28 ஆயிரத்து 531 விண்ணப்பங்கள் அளித்து 28 ஆயிரத்து 159 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 பேருக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு 28 பேர் தபால் ஓட்டு அளித்துள்ளனர்.

மொத்தமுள்ள 4 லட்சத்து 91 ஆயிரத்து 27 தேர்தல் பணியாளர்களில் 2 லட்சத்து 592 பேர் தபால் ஓட்டுகள் அளித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் வாக்கு எண்ணும் மே 2-ந் தேதி காலை 8 மணிக்குள் தபால் ஓட்டை அளிக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று அரசு பொது விடுமுறை. தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாகன சோதனைகளில் பறக்கும்படை, கண்காணிப்புக் குழுவின் கெடுபிடி இருக்காது. ஆனாலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கம் தொடர்ந்து நீடிக்கும்.

வேட்பாளர் தகுதி நீக்கம் மற்றும் தேர்தலை நிறுத்தும் அளவுக்கு பணப்பட்டுவாடா உள்ளிட்ட ஏதாவது புகார்கள் உள்ளதா? என்று கேட்டால், பல புகார்களை நாங்கள் பெற்று தினமும் அதுபற்றிய அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். அதை ஆராய்ந்து பார்த்து, பல்வேறு தகவல்களைப் பெற்று தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும். இதுபோன்ற முடிவை எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையம் எடுக்கலாம்.

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பெண் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 234 பெண் வாக்குச்சாவடிகள் உள்ளன. அதுபோல ஒவ்வொரு தொகுதிக்கும் 4 மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்காளருடைய வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு இருந்தால், அதுபற்றி வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் சொல்லி ‘டெண்டர்’ வாக்கு செலுத்தலாம். பின்னர் அது சரிபார்க்கப்படும். எலக்ட்ரானிக் வாக்கு எந்திரத்தில் வாக்கு செலுத்திய பிறகு, விவிபேட் எந்திரத்தில் வேறு சின்னம், வேறு வேட்பாளர் பெயர் காட்டப்பட்டால் அதுபற்றி உடனடியாக தலைமை அலுவலரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். அவர் வந்து அதை சரிபார்ப்பார். முன்னதாக வாக்காளரின் வாக்குமூலம் பெறப்படும்.

அங்கிருக்கும் தேர்தல் முகவர்களை அழைத்து, அவர்கள் முன்னிலையில் தலைமை அதிகாரி சரிபார்த்தலுக்காக வாக்களிப்பார். அதில், வாக்காளரின் புகாரில் உண்மை இருப்பது தெரிந்தால் உடனடியாக வேறு எந்திரம் மாற்றப்படும். ஆனால் வாக்காளர் பொய் புகார் கொடுத்தால் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 2019-ம் ஆண்டு தேர்தலில் இதுதொடர்பாக ஒரு புகார் கூட வரவில்லை.

தமிழகத்தில் வாகன சோதனையில் அதிகமாக சென்னையில் ரூபா. 57.70 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் ரூபா. 55.48 கோடி, கோவையில் ரூபா. 44.88 கோடி பணம், பொருட்கள் பிடிபட்டுள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad