பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தின் வரம்புகளுக்கு திரும்பாமல் ஈரான் அரசு யுரேனியம் செறிவூட்டலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திருந்து அமெரிக்கா விலகுவதாக அப்போதைய அதிபர் டிரம்ப் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார். ஒப்பந்தத்தில் இருந்து விலகியதும் ஈரான் மீது மீண்டும் கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தார்.
அதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக புறக்கணித்தது. தடை விதிக்கப்பட்ட போர்டோ நகர நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியது.
மேலும் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் யுரேனியம் செறிவூட்டும் புதிய ஆலையை ஈரான் கட்டியது. ஈரான் இந்தப் புதிய ஆலையை கட்டுவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பின்னர் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், புதிய அதிபர் ஜோ பைடன் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தார். இது தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
ஆனாலும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் வரம்புகளுக்கு திரும்பாமல் யுரேனியம் செறிவூட்டலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேவைப்பட்டால் 60 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாதன்ஸ் நகரின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக ஆலையின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் வினியோகம் தடைபட்டது. எனினும், ஆலையில் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்படவில்லை. இது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என ஈரான் குற்றம்சாட்டி உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தும் பணியை ஈரான் தொடங்கியது.
யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தும் முடிவானது, இஸ்ரேலின் பயங்கரவாதத்திற்கு கொடுக்கும் பதிலடி என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கூறி உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த வெடி விபத்தை குறிப்பிட்டு பேசிய அவர், ‘நீங்கள் (இஸ்ரேல்) செய்தது அணுசக்தி பயங்கரவாதம், நாங்கள் செய்வது சட்டத்திற்குட்பட்டது’ என்றார்.
அணு ஆயுதங்ளை உற்பத்தி செய்ய 90 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை என்பதால் அந்த இலக்கை நோக்கி ஈரான் செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை ஈரான் மறுத்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் செறிவூட்டலை 3.67 சதவீதமாக வைத்திருப்பதாக உறுதியளித்தது. இருப்பினும் ஜனவரி மாதத்தில் செறிவூட்டலை 20 சதவிகிதம் வரை அதிகரித்தது. மருத்துவ நோக்கங்களுக்காக அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை என்று ஈரான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment