(நா.தனுஜா)
சவுதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையைச் சேர்ந்த 41 பெண் புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
அதுமாத்திரமன்றி அவர்களின் விடுதலையை வலியுறுத்தி, நாட்டு மக்கள் அனைவரும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு கடிதமொன்றை எழுதுமாறும் மன்னிப்புச் சபை கோரியுள்ளது. அதற்கான மாதிரி கடிதத்தையும் மன்னிப்புச் சபை அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அக்கடிதத்தில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன, இலங்கையைச் சேர்ந்த 41 பெண் புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 18 மாதகாலமாக சவுதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 3 பெண்கள் தமது பிள்ளைகளையும் தம்முடன் வைத்திருப்பதுடன் மற்றுமொரு பெண்ணுக்கு அவசர மருத்துவ உதவிக்கான தேவையேற்பட்டுள்ளது.
அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு எதிராக ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது வழக்குகள் காணப்படுகின்றனவா என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.
அதுமாத்திரமன்றி அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகள் எவையும் வழங்கப்படவில்லை.
அவர்களை விரைவில் விடுவிப்பதாக சிறைச்சாலை அதிகாரிகள் வாக்குறுதியளித்திருந்த போதிலும், தற்போது வரை 41 பெண்களும் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் அவர்களை உடனடியாக மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுடன் தொடர்புகளைப் பேணிவருவதுடன் பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளது. இருப்பினும் இதுவரையில் அவர்களை நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பெருமளவில் பங்களிப்புச் செய்துவரும் நிலையில், தற்போது அவர்களுக்கு உதவி தேவைப்படுகையில் அரசாங்கம் அதற்கு மாறாக செயற்படக் கூடாது என்று அந்த மாதிரி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment