ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி - நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள பௌத்த, முஸ்லிம் மதத் தலைவர்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி - நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள பௌத்த, முஸ்லிம் மதத் தலைவர்கள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் இரண்டு வருட நிறைவையொட்டி குண்டுத் தாக்குதலில் மரணமடைந்த மக்களுக்காக நாளை 21ஆம் திகதி காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

ஆலயங்களிலும் வீடுகளிலும் இந்த மௌன அஞ்சலி நடைபெறுவதுடன் நாட்டில் அனைத்து இன, மத, மக்களும் இந்த மௌன அஞ்சலியில் இணைந்து கொள்ளுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நாட்டில் அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் மக்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பிள்ளைகள் தமது பெற்றோருடன் இணைந்து ஆலயங்களில் நடைபெறும் நினைவஞ்சலி, மத வழிபாடுகளில் கலந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 21ஆம் திகதி காலை 8.45 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளதுடன் நினைவஞ்சலி திருப்பலி பூசைகள், மத வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

பிரதான அஞ்சலி நிகழ்வு குண்டுத் தாக்குதல் நடைபெற்ற கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற உள்ளதுடன் பௌத்த மதத்தின் சார்பில் ஓமல்பே சோபித தேரர், முஸ்லிம் மதத்தின் சார்பில் ஹசன் மௌலவி உள்ளிட்ட மதத் தலைவர்களும் அந்த நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

அன்று மாலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற கட்டுவாப்பிட்டி ஆலயத்தில் விசேட நினைவஞ்சலி திருப்பலி நடைபெற உள்ளது. 

சிறிய ஆன்மீக ரீதியான ஊர்வலம் ஒன்று நீர்கொழும்பு மாரி ஸ்டெலா மைதானத்திலிருந்து கட்டுவாப்பிட்டிய ஆலயம் வரை நடைபெற உள்ளதுடன் அந்த ஊர்வலத்தில் அருட்தந்தையர்கள் உள்ளிட்ட ஆன்மீகத் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

பொதுமக்கள் ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment