ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உடல் அடக்கத்திற்கான காணி - ஜனாஸா நல்லடக்கத்துக்கு உதவியோர் அனைவருக்கும் முஸ்லிம்களின் நன்றி - News View

Breaking

Post Top Ad

Monday, March 8, 2021

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உடல் அடக்கத்திற்கான காணி - ஜனாஸா நல்லடக்கத்துக்கு உதவியோர் அனைவருக்கும் முஸ்லிம்களின் நன்றி

கொரோனா காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டு வருகின்ற காணி ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காகித நகர் கிராம சேகவர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனையில் அமைந்துள்ளது.

இந்தக் காணியை கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக அடையாளப்படுத்தி பிரதேச செயலகம், மற்றும் காணிப் பிரிவு உள்ளூராட்சி திணைக்களம் என்பவற்றின் அனுமதி பெறப்பட்டு அவைகள் சுகாதார திணைக்களத்துக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் அரசாங்கத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். நௌபர் குறிப்பிடுகின்றார்.

கொவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்றும் அதற்கான வழிகாட்டல்கள் வெளியிட்டதையடுத்தும் இந்தக் காணியை ஓட்டமாவடி பிரதேச சபை அடையாளப்படுத்தி அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தது. 

இது தொடர்பாக சுகாதார திணைக்களம், இராணுவத்தினர் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு ஓட்டமாவடி பிரதேச சபை அறிவித்திருந்தது.

இதையடுத்து கடந்த 4ம் திகதி புதன்கிழமையன்று பிரிகேடியர் எஸ்.பிரதீப் கமகே தலைமையிலான இராணுவ உயிரதிகாரிகளும், ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சகாப்தீன் மற்றும் பிரதேச சபை அதிகாரிகள், கல்குடா, காத்தான்குடி, மற்றும் ஏறாவூர், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள், ஓட்டமாவடி ஜனாசா நலன்புரி அமைப்பின் பிரதிநிதிகள், ஓட்டமாவடி சுகாதார அதிகாரிகள் அங்கு சென்று காணியை பார்வையிட்டனர்.

இந்தக் காணியை பார்வையிட்டதன் பின்னர் இந்தக் காணியில் சடலங்களை அடக்கம் செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டதையடுத்து பல்வேறு கலந்துரையாடல்களும் கூட்டங்களும் நடைபெற்றன.

அந்த வகையில் 04.03.2021 வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். நௌபர் தலைமையின் ஒரு கூட்டம் நடைபெற்றது.

இது தொடர்பான ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக காத்தான்குடி, கல்குடா மற்றும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளை உள்ளடக்கிய சிவில் சமூக அமைப்புக்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது. 

இதன்போது கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை குறித்த காணியில் அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகளை அவசரமாக மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அரசுக்கும் சுகாதார திணைக்களத்துக்கும் இராணுவத்தினருக்கும் ஒத்துழைப்புகளை வழங்குவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், உடனடியாகவே ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் குறித்த காணிக்குச் சென்று இரவோடு இரவாக காணியை துப்புரவு செய்து உடல்களை நல்லடக்கம் செய்யத் தேவையான ஒழுங்குகளை மேற்கொண்டனர்.

இதையடுத்து 05.02.2021 வெள்ளிக்கிழமை காலை பிரிகேடியர் எஸ்.பிரதீப் கமகே தலைமையிலான இராணுவ உயரதிகாரிகளும், சுகாதார அதிகாரிகளும் ஓட்டமாவடி பிரதேச சபையினரும் ஏனைய சில முக்கியஸ்தர்களும் சென்று குறித்த காணியை மீண்டும் பார்வையிட்டதன் பின்னர் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டது. உடனேயே அடக்கம் செய்வதற்கான குழிகள் வெட்டப்பட்டன.

இங்கு முதல் ஜனாசாவாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளரான ஏறாவூரைச் சேர்ந்த சேகு அப்துல் காதர் கலீலுர் ரஹ்மான் என்பவருடைய ஜனாசா குருநாகல் வைத்தியசாலையிலிருந்து கொண்டு வரப்பட்டு அந்த இடத்தில் ஜனாசா தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை மாத்திரம் இங்கு 9 ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.

அன்றையதினம் ஏறாவூரைச் ​சேர்ந்த 2 பேர், சாய்ந்தமருதைச் சேர்ந்த 2 பேர், மட்டக்களப்பு, கோட்டைமுனை 01, காத்தான்குடி 01, அக்கரைப்பற்று 01, சம்மாந்துறை 01, அட்டாளைச்சேனை 01 என 9 ஜனாசாக்கள் (சடலங்கள்) நல்லடக்கம் செய்யப்பட்டன. 

பின்னர் 6ம் திகதி சனிக்கிழமை நள்ளிரவு வரை மாளிகாவத்தை 01, நிட்டம்புவ 03, கஹட்டோவிட்ட 01, பம்மன்ன 01, திஹாரிய 01, அநுராதபுரம் 01, அக்குரன 01, மாத்தளை 01, அம்பதென்ன 01 என 11 ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. 

இவ்வாறு தற்போது இங்கு கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யும் பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

ஜனாசாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் அரசாங்கம், சகாதார அமைச்சு, சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தது. இங்கு ஜனாசாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் மிகவும் கரிசனையுடன் இராணுவ பிரிகேடியர் பிரதீப் கமகே செயற்பட்டார். 

ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் கல்குடா, காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமான மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சிவில் சமூக அமைப்புடன் நெருக்கமாக அவர் செயற்பட்டதுடன், ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.

அதேபோன்று ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌபர், பிரதேச சபை செயலாளர் எம்.எஸ். சகாப்தீன், பிரதேச சபை பிரதி தவிசாளர், உறுப்பினர்கள், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் றியாஸ், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தாரிக், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள், ஓட்டமாவடி ஜனாசா நலன்புரி அமைப்பு என பலரும் இங்கு தமது முழுமையான பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.

ஜனாசா தொழுகையை குடும்ப உறவினர்கள் மாத்திரம் அவ்விடத்தில் நடத்துவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். 

அனைத்து ஜனாசாக்களையும் நல்லடக்கம் செய்யும் பணியில் ஓட்டமாவடி பிரதேச சபை ஒரு சில ஊழியர்களை ஈடுபடுத்தியுள்ளது. 

ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யும் அந்தப் பகுதியில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த மையவடி பகுதி உட்பட அந்த வளாகத்தினை மேலும் அபிவிருத்தி செய்யவும் ஒரு பூங்காவாக அமைப்பதற்கும் ஜனாசாக்களுடன் வரும் உறவினர்கள் அவ்விடத்தில் தரித்து நிற்பதற்குமான ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் நௌபர் தெரிவிக்கின்றார். 

ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதியளித்த அனைத்து தரப்பினருக்கும் மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

எம்.எஸ்.எம். நூர்தீன் - காத்தான்குடி

No comments:

Post a Comment

Post Bottom Ad