உண்மை நஷ்டத்தை கண்டறிய தடயவியல் கணக்காய்வு அவசியம் - ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 23, 2021

உண்மை நஷ்டத்தை கண்டறிய தடயவியல் கணக்காய்வு அவசியம் - ஹர்ஷ டி சில்வா

சீனி இறக்குமதியால் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் உண்மையான நஷ்டத்தை கண்டறிய தடயவியல் கணக்காய்வொன்றை மேற்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுங்க கட்டளைச் சட்டங்கள் மீதான விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 25 சதம் வரிக்கு சீனி இறக்குமதி செய்ததன் நன்மை மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த விடயம். 

ஒரு கிலாே சீனி 85 ரூபாவுக்கு விற்கப்பட வேண்டுமென வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அந்த வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் மக்களுக்கு சீனி பெற்றுக் காெள்ள முடிந்ததா?.

பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிப்பதும் குறைப்பதும் அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்படுகின்றது. எமது அரசாங்கத்தின் காலத்திலும் அவ்வாறு இடம்பெற்றிருக்கின்றது. அது தவறு என தெரிவிக்கவில்லை. 

ஆனால், இங்கு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு என தெரிவித்து, அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை இல்லாமலாக்கி இருக்கின்றது.

கடந்த ஒக்டோபர் மாதம் சீனி இறக்குமதிக்கான செலவு ஒரு கிலோவுக்கு 80.75 ரூபாவாகும். ஆனால் சீனி இறக்குமதி வரி 25 சதம் வரை வரி குறைப்பின் மூலம் கடந்த நவம்பர் முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இறக்குமதி செலவு கிலாவொன்றுக்கு 77.27 ரூபாவாகும். 

ஆனால் இந்த காலப்பகுதியில் சதொச நிறுவனம் ஒரு கிலாே சீனி நூறு ரூபாவுக்கும் அதிகவிலைக்கு பெற்றுக் கொண்டுள்ளதாகவே அதிகமானவர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில் எத்தனை ரூபாவுக்கு பெற்றுக் கொண்டது என்பது யாருக்கும் தெரியாது.

அதனால்தான் சீனி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதென தெளிவாகின்றது. ஏற்பட்டிருக்கும் உண்மையான நட்டத்தை தெரிந்துகொள்வதற்கு இது தொடர்பாக தடயவியல் கணக்காய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலமே உண்மையை கண்டறியலாம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment