வஹாப் வாதம் அல்லது கலிபா ஆட்சியை இலங்கையில் உருவாக்கும் எண்ணம் - அரசு கவனமாக கையாள வேண்டுமென்கிறார் சந்திரகாந்தன் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 25, 2021

வஹாப் வாதம் அல்லது கலிபா ஆட்சியை இலங்கையில் உருவாக்கும் எண்ணம் - அரசு கவனமாக கையாள வேண்டுமென்கிறார் சந்திரகாந்தன்

வஹாப் வாதம் அல்லது கலிபா ஆட்சியை இலங்கையில் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கில் ஒரு சிறிய அளவிலான இளைஞர் குழுவொன்று நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்புத் தஹரி போன்ற அமைப்புகள் மாற்றுப் பெயரில் இங்கு இயங்குவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்புவேளை பிரரேரணை மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, வஹாப் வாதம் அல்லது கலிபா ஆட்சியை கொண்டுவர வேண்டுமென்ற நோக்கில் ஒரு சிறிய அளவிலான இளைஞர் குழுவொன்று நாட்டில் உருவாக்கப்பட்டுவிட்டது. 

இவ்வாறு உருவாகியுள்ள சிறிய கூட்டத்தை சரியாக கையாள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குள்ளது. அதற்காக ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களையும் வெறுக்கத்தக்க சம்பவங்கள் இடம்பெற்றுவிடக்கூடாது.

தீவிரவாத அமைப்புகளாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களும், பங்களாதேஷில் ஜனார்த்துல் முஜார்தின் அமைப்பும், பாகிஸ்தானில் ரஸ்டர்ஐ தலிபா அமைப்பும் மலேசியாவில் இஸ்பூத் தஹரி அமைப்பும் இயங்குகின்றன. 

மலேசியாவில் உள்ள இஸ்பூத் தஹரி போன்ற அமைப்புகள் இலங்கையிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்குகின்றன. இதில் இலங்கையில் உள்ள படித்த முஸ்லிம்களும் உள்வாங்கப்பட்டு இயங்குகிறது. இந்த விடயம் மிகவும் கவனமாக இலங்கையில் கையாளப்பட வேண்டும். இக்குழுக்களில் நேரடியாகவோ மறைமுகமாகவே ஈர்ப்புச் செய்யப்பட்டவர்களை வெளியில் எடுக்க வேண்டும். 

இலங்கை என்பது பல இனம், மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். இங்கு கலிபா ஆட்சியை ஏற்படுத்த முடியாது. இதற்கு எதிரான செயற்பாடுகளுக்காக ஜம்இய்யதுல் உலமா சபை போன்ற பொதுவான அமைப்புகள் முன்வர வேண்டும். ஆனால், இஸ்லாமிய அமைப்புகள் இப்பொழுதும் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கின்றன. 

ஆகவே, பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் இந்த செயற்பாட்டின் பின்புலத்தை ஆராய்ந்து எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment