இலங்கையில் புர்காவை தடை - தலையீடுமாறு கோரும் தென்னாபிரிக்க முஸ்லிம் அமைப்புகள் - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

இலங்கையில் புர்காவை தடை - தலையீடுமாறு கோரும் தென்னாபிரிக்க முஸ்லிம் அமைப்புகள்

இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து தென்னாபிரிக்காவை தலையீடுமாறு கோரப்பட்டுள்ளது.

அதன்படி தென்னாபிரிக்க முஸ்லிம் அமைப்புகள் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கு இலங்கையின் புர்கா மீதான உத்தேச தடை மற்றும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பாடசாலைகளை மூடும் தீர்மானம் தொடர்பில் தலையிடுமாறு அழைப்பு விடுத்துள்ளன.

தென்னாபிரிக்காவின் ஐக்கிய உலமா கவுன்சில் (UUCSA), தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் நலேடி பாண்டேரிடம் இந்த விடயத்தில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தென்னாபிரிக்காவின் ஐக்கிய உலமா கவுன்சில் இன் பொதுச் செயலாளர் யூசுப் படேல், இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் பிரதான மற்றும் சமூக ஊடகங்களில் கடுமையான வெறுப்புணர்வின் இலக்காக மாறிவிட்டனர்.

புர்கா மீதான தடை மற்றும் இஸ்லாமிய பாடசாலைகளை மூடுவது என்பது இலங்கையின் பெளத்த பெரும்பான்மையை திருப்திப்படுத்துவதாகும், அவர்கள் வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் குறுங்குழுவாத மற்றும் மத பிளவுகளை ஊக்குவிப்பதில் முன்னேறுகிறார்கள் என்று கூறினார்.

முன்னதாக தென்னாபிரிக்காவின் ஐக்கிய உலமா கவுன்சில், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்வதற்குப் பதிலாக தகனம் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் முடிவு செய்தபோது அதற்கு எதிராகவும் இவ்வாறு அழைப்பு விடுத்திருந்தது.

இதேவேளை இலங்கைக்கு எதிரான நடவடிக்கைக்கான அழைப்புக்கு குரல் கொடுத்த தென்னாபிரிக்க முஸ்லிம் நெட்வொர்க், (சாம்நெட்) இஸ்லாமிய பாடசாலைகளை குறி வைப்பது இலங்கை அரசாங்கத்தின் பாசாங்குத்தனம் என்று கூறியுள்ளது

"பிற மதக் குழுக்களும் தங்கள் மத போதனைகளை கற்பிக்கும் நிறுவனங்களைக் கொண்டுள்ளன, ஆனால் அவற்றைக் குறி வைக்கும் எந்த முயற்சியும் இலங்கை அரசாங்கம் எடுக்கப்படவில்லை" என்று சாம்நெட் தலைவர் டாக்டர் பைசல் சுலிமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர, இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கும், பெரும்பாலான இஸ்லாமிய பாடசாலைகளை மூடும் அமைச்சரவைப் பத்திரத்தில் கையெழுத்திட்டதாக அண்மையில் தெரிவித்தார்.

எனினும் இதுபோன்ற தடையை விதிப்பதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்றும், இது ஒரு முன்மொழிவு மாத்திரமேயாகும் என்றும், இது கலந்துரையாடல்களின் கீழ் உள்ளதாகவும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கு அமைவாக, தொடர்ந்தும் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பிரேரணை உருவாக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனுமான ஒரு பரந்த உரையாடலை அரசாங்கம் ஆரம்பிப்பதுடன், தேவையான ஆலோசனைகள் நடைபெறுவதற்காகவும், ஒருமித்த கருத்தை எட்டுவதற்காகவும் போதுமான நேரம் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad