அரசாங்கத்தின் தேவைக்கேற்ப மாகாண சபைத் தேர்தலுக்கான புதிய சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு அறிவிக்காமல் உருவாக்குவது தவறு - லக்ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Saturday, March 20, 2021

அரசாங்கத்தின் தேவைக்கேற்ப மாகாண சபைத் தேர்தலுக்கான புதிய சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு அறிவிக்காமல் உருவாக்குவது தவறு - லக்ஷ்மன் கிரியெல்ல

(எம்.மனோசித்ரா)

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான புதிய சட்டமூலத்தை உருவாக்குவதற்கான அதிகாரம் குறித்தவொரு குடும்ப அங்கத்தவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்கு அறிவிக்காமல் இவ்வாறு அரசாங்கத்தின் தேவைக்கேற்ப சட்டமூலத்தை உருவாக்குவது தவறாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், மாகாண சபைத் தேர்தல் தொடர்பான புதிய சட்ட மூலத்தை உருவாக்குவதற்கான அதிகாரம் குடும்ப அங்கத்தவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. புதிய சட்டமூலமொன்று உருவாக்கப்பட வேண்டுமாயின் முதலாவதாக பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும். இவ்வாறான சட்டமூலமொன்றை அரசாங்கத்திற்கு தேவையான வகையில் உருவாக்குவது தவறானதாகும். சகல கட்சிகளினதும் ஆலோசனைகள் கருத்துக்கள் கோரப்பட வேண்டும். 

19 ஆவது திருத்தத்தை நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் அவ்வாறுதான் உருவாக்கினோம். எனவே மாகாண சபை தொடர்பான புதிய சட்டமூலமொன்றை உருவாக்குவதாயின் பாராளுமன்றத்தில் அது தொடர்பில் அறிவிக்குமாறு கோருகின்றோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு கோரப்பட்டது. எனினும் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைத்து இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாம் அறிவித்திருந்தோம். ஆனால் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறு புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க முடியாது. 

மறுபுறம் 13 ஆவது திருத்தத்திற்கு இணக்கம் தெரிவிக்க முடியாது என கூறுபவர்களே தற்போது தேர்தலை நடத்த ஆயத்தமாகின்றனர். தற்போதைய அரசாங்கத்திற்கு ஸ்திரமான கொள்கையோ வேலைத்திட்டமோ கிடையாது.

இதேவேளை சீனி இறக்குமதி வரி குறைப்பினூடாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது. எனவே இனியும் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை கிடையாது. நேரடியாக வழக்கு தொடர முடியும். காரணம் மத்திய வங்கி பிணை முறி மோசடியின் போது எமது அரசாங்கத்திலேயே வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றதாகவுள்ளது. அதில் எவ்வித சாட்சிகளும் உள்ளடக்கப்படவில்லை. ஆணைக்குழுவொன்றுக்கு விசாரணைகளை முன்னெடுத்து தீர்ப்பும் வழங்க முடியாது. 

ஆனால் இந்த ஆணைக்குழு அவை இரண்டையும் செய்துள்ளது. முக்கிய சாட்சிகளை முன்னிலைப்படுத்தியிருந்தால் தற்போதைய அரசாங்கத்தின் மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் என்றார்.

No comments:

Post a Comment