பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையாளர்கள் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய காரியாலயங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை இவ்வாரம் மேற்கொண்டிருந்தனர்.
இதில், ஆணைக்குழுவின் ஆணையாளர்களான ஹர்ஸா நவரட்ண, அநுசூயா சண்முகநாதன் மற்றும் புலனாய்வு விசாரணைகள் பணிப்பாளர் சுலாரி லியனகம என்பவர்கள் உள்ளடங்குவர்.
ஆணையாளர் ஹர்ஸா நவரட்ண இவ்விஜயம் பற்றி கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்தில் இன்று நடைபெற்ற சிவில் அமைப்புக்களுடனான கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போது,
கிழக்கு மாகாணத்தில் தற்போதுள்ள மனித உரிமை நிலவரங்கள் பற்றி உண்மை நிலையினை சிவில் குழுக்கள் மூலமாக கலந்துரையாடி தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும், அவ்விடயம் ஆணைக்குழுவின் விடயப்பரப்பிற்குள் உள்ளடங்கும் பட்சத்தில் நடவடிக்கையெடுக்கும் நோக்குடனேயே தாங்களது குழுவின் வருகை இருப்பதாகவும் இன நல்லிணக்கத்துடன் அனைவர்களும் சட்டத்தினை மதித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டுமென்பதுடன், ஆணைக்குழுவுடன் இணைந்து சிவில் அமைப்புக்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆணையாளர் அநுசூயா சண்முகநாதன் கருத்துத் தெரிவிக்கும் போது, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிவில் அமைப்புக்கள் எழுத்து மூலம் முறைப்பாடுகளை ஆணைக்குழுவிற்கு கொடுக்கும் போது, அதற்குரிய ஆவணங்களைப் பரிசீலனை செய்த பின் எவ்வித பாரபட்சமுமின்றி துரித நடவடிக்கை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார்.
சிவில் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த புலனாய்வு விசாரணைகள் பணிப்பாளர் சுலாரி லியனகம, மனித உரிமைகள் ஆணைக்குழு மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பதற்காக முனைப்புடன் செயற்பட்டு வரும் சுதந்திரமான ஆணைக்குழு என்பதுடன், அரச நிருவாக நிறைவேற்றுத் துறையினர் மக்களது அடிப்படை உரிமைகளை மீறியிருந்தால் அல்லது மீறப்படவிருந்தால் அதற்காக நடவடிக்கை எடுப்பதுடன், அரசிற்கு பரிந்துரைகளைச் செய்கின்ற அதிகாரமும் இருக்கின்றதெனவும் அவ்வப்போது தேசிய ரீதியில் இடம்பெற்ற சிறுபான்மை மக்களுக்கான உரிமை மீறல்கள் பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு பரிந்துரைகளைச் செய்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடலின் போது மனித உரிமை மீறல்கள் தொடர்பான கருத்துக்களை வழங்கியதுடன், அது தொடர்பான ஆவணங்களையும் கையளித்திருந்தனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் வடக்கு மாகாணத்திற்கும் கடந்த மாதம் விஜயம் மேற்கொண்டிருந்தனர் என்பதுடன், கிழக்கு மாகாண விஜயமும் அவர்களுக்கு மனித உரிமைகள் நிலையினை தெளிவாக விளக்கியிருக்கும் என்பதுடன், இவ்வாறான உயரதிகாரிகளின் வருகை எதிர்காலத்தில் வட-கிழக்கு மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment