(எம்.மனோசித்ரா)
அரசியல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நெருக்கடிகளுக்காக அமைச்சரவை தீர்மானங்கள் மாற்றப்பட மாட்டாது. யாழ். தீவுகளில் சீன மின் உற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பான தீர்மானத்தில் எந்த மாற்றமும் இதுவரையில் கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில், யாழில் மூன்று தீவுகளில் சீனா முன்னெடுக்கவிருந்த மின் உற்பத்தி வேலைத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களின் உண்மை தன்மை குறித்து வினவிய போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்ட எந்தவொரு தீர்மானமும் அரசியல் மற்றும் சர்வதேச இராஜாதந்திர நெருக்கடிகளால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்தப்படவில்லை என்பதை தெளிவாகக் கூறுகின்றோம் என்றார்.
யாழில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினா தீவு ஆகியவற்றில் சீனாவின் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி வேலைத்திட்டத்திற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
இதற்கு இந்தியா எதிர்ப்பை வெளியிடும் அல்லது இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்கும் என்று எதிர்க்கட்சி உள்ளிட்ட பலதரப்பினரும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment