(எம்.ஆர்.எம்.வசீம்)
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே ராஜபக்ஷ் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும். அதற்காக எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வருகின்றது. எந்த தேர்தலை நடத்தினாலும் அதற்கு முகம்கொடுப்பதற்கான தயார்படுத்தல்களை ஐக்கிய தேசிய கட்சி தற்போது மேற்கொண்டு வருகின்றது. மாவட்ட மட்டத்தில் கட்சி ஆதரவாளர்களை பலப்படுத்தும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.
இருந்தபோதும் ராஜபக்ஷ் அரசாங்கம் மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்தே ஆட்சிக்கு வந்தது. மக்களுக்கு வாக்குறுதியளித்த எதனையும் அரசாங்கத்துக்கு செய்ய முடியாமல் போயிருக்கின்றது.
பொருளாதார ரீதியில் மக்கள் பாரியளவில் கஷ்டப்படுகின்றனர். நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. பணம் அச்சிட்டே அரசாங்கம் நாட்டை கொண்டு செல்கின்றது. இந்த நிலை தொடருமானால் பாரியளவில் பண வீக்கம் அதிகரிக்கும்.
மேலும், பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. ஒரு சில பொருட்களின் விலை நல்லாட்சி அரசாங்க காலத்திலும் பார்க்க அதிகமாகும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததுடன் மக்களுக்கு பாரிய நிவாரணங்களை பெற்றுக் கொடுத்தோம். ஆனால் ராஜபக்ஷ் அரசாங்கத்தில் எந்த நிவாரணமும் மக்களுக்கு கிடைக்கப் பெறவில்லை.
அதனால், ராஜபக்ஷ் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரே மேடையில் இருக்க வேண்டும். அதன் மூலமே இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும். எமது எதிரி ராஜபக்ஷ் அரசாங்கமாகும். பொது எதிரியை தோற்கடிப்பதே எமது நோக்கம்.
அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய சிறிய கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும். அதற்காக எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment