இந்தியா, அமெரிக்காவிடம் 4 போர் விமானங்களை பெற்றுக் கொள்கிறது இலங்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 2, 2021

இந்தியா, அமெரிக்காவிடம் 4 போர் விமானங்களை பெற்றுக் கொள்கிறது இலங்கை

(ஆர்.யசி)

கடல் எல்லை பாதுகாப்பு குறித்து இலங்கை அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் கடல் எல்லை கண்காணிப்பிற்காக இந்தியாவிடம் இருந்து இரண்டு விமானங்களையும், அமெரிக்காவிடம் இரண்டு விமானங்களையும் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவை அடுத்து இன்று கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரண இது குறித்து தெரிவித்திருந்தார்.

அவர் கூறுகையில், இலங்கையின் தற்கால சவால்களாக கடல் எல்லை பாதுகாப்பு காணப்படுகின்றது, கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுகின்றதுடன், இலங்கைக்குள்ளும் போதைப் பொருள் கொண்டுவரப்படுகின்றது.

இன்று இலங்கை கடல் எல்லை சர்வதேச போதைப் பொருள் வியாபாரத்தின் முக்கிய மையமாக கருதப்படுகின்றது. எனவே இலங்கையின் கடல் எல்லையை பாதுகாப்பதே பாதுகாப்பு படைகளின் முக்கிய சவாலாக காணப்படுகின்றது.

அதற்கமைய இந்தியாவிடம் இருந்து இரண்டு விமானங்களும், அமெரிக்காவிடம் இருந்து இரண்டு விமானங்களும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும், இவை நட்பு ரீதியில் அவர்கள் எமக்கு இலவசமாக தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கடற்படை தளபதி தெரிவித்தார்.

இது குறித்து கடற்படை பேச்சாளர் துசான் விக்ரமசிங்கவிடம் மேலதிக தகவல்களுக்காக வினவியபோது அவர் கூறியதானது, இலங்கையின் கடல் எல்லை கண்காணிப்பு பணிகளுக்காக விமானங்களை பெற்றுக் கொள்ள இலங்கை கடற்படை தீர்மானித்துள்ளது.

ஆனால் எந்த ரகத்தை சேர்ந்த விமானங்கள் எமக்கு வழங்கப்படும் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவும், அமெரிக்காவும் எமக்கு விமானங்களை வழங்குவதாக கூறியுள்ளனர். இதில் இந்தியா இரண்டு விமானங்களும், அமெரிக்கா இரண்டு விமானங்களையுமே தருவதாக கூறியுள்ளனர்.

இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் இது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, எவ்வாறு இருப்பினும் நான்கு விமானங்களையே நாம் பெற்றுக் கொள்ளவுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment