(எம்.மனோசித்ரா)
ஜெனிவா தொடரில் இலங்கைக்கு எதிரான அநீதியில் இந்தியா பங்காளியாகக் கூடாது. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது முற்றிலுமே ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும். இதனை பொய்மையின் உச்ச கட்ட நிலைமையாகவே இலங்கை கருதுகின்றது. எனவேதான் நட்பு நாடுகள் பல எம்முடன் இணைந்துள்ளன. அந்த வகையில் ஆசியாவில் இலங்கைக்கு மிக நெருங்கிய நட்பு நாடென்ற ரீதியில், இந்தியா அந்த அநீதியில் ஒத்துழைக்காது என்ற நம்பிக்கை உள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று செவ்வாய்கிழமை இணைய வழியூடாக நடைபெற்றது. இதன் போது ஐ.நா மனித உரிமைகள் பேரவை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.
இங்கு பதிலளித்த அமைச்சரவையின் பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிடுகையில்,
கேள்வி : ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் இந்தியா இதுவரையில் அதன் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இந்தியாவின் ஆதரவின்றி அந்த சவாலை வெற்றி கொள்ள முடியுமா ?
பதில் : இந்த விடயத்தில் நாம் யாரையும் சுட்டிக்காட்டப் போவதில்லை. இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை அநீதியானது என்பதையே நாம் வலியுறுத்தியுள்ளோம். அந்த நிலைப்பாட்டிலிருந்து நாம் ஒருபோதும் விலகப்போவதில்லை. அதில் இலங்கை ஸ்திரமானதும் உறுதியானதுமான நிலைப்பாட்டிலேயே உள்ளது. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை முழுமையாகவே அநீதியானது. எனவே அதனை அடியோடு நிராகரித்துள்ளோம்.
ஆசியாவில் இந்தியாவானது இலங்கைக்கு மிக நெருங்கிய அயல் நட்பு நாடாகும். அந்த வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடரில் இலங்கைக்கு எதிரான அநீதிகளுக்கு இந்தியா ஒருபோதும் ஒத்துழைக்காது என்ற ஆழமான நம்பிக்கையுள்ளது. இது தொடர்பில் பல கருத்துக்களை முன்வைத்திருக்கின்றோம்.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையாளர் முன்வைக்கப்படும் கருத்துக்களில் நாம் அதிருப்தியடைந்துள்ளோம். காரணம் அவரால் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களுமே உண்மைக்கு முரணானதாகும். பொய்மையின் உச்சகட்ட நிலைமையாகவே இதனை இலங்கை கருதுகின்றது. எனவே தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று இதனுடன் தொடர்புப்பட்டுள்ள அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றோம்.
விடுதலைப் புலிகள் அமைப்பினால் வடக்கிலுள்ள சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சகலரும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே இலங்கைக்கு எதிராக கொண்டவரப்பட்டுள்ள தீர்மானத்தை தடுத்தாலே பாதிக்கப்பட்ட அந்த சிறுவர்களுக்கும் மக்களுக்கும் நீதி கிடைத்து விடும். எனவே நீதி வெல்லும் என்ற நம்பிக்கையுள்ளது.
கடந்த காலத்தில் இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற பாரிய மோசடிகளின் மற்றுமொரு பகுதியாகவே இது அமைகின்றது. அவற்றில் பிரதானமானது முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா. பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியமையாகும். அவரின் இந்த செயற்பாடே இலங்கை இன்று இவ்வாறு பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளமைக்கான பிரதான காரணியாகும்.
எனவே இது தொடர்பில் எமது கடும் அதிருப்தியை தெரிவிக்கின்றோம். இலங்கை இராணுவத்தை குற்றவாளிகளாக்கும் மிகவும் மோசமான இந்த யோசனையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மோசமான செயற்பாடுகள் தொடர்பில் உலகின் பல நாடுகளும் புரிந்து கொண்டுள்ளன. இந்த யாதார்த்தத்தை புரிந்து கொண்டுள்ள நாடுகள் எம்முடன் இணைந்துள்ள சந்தர்ப்பத்தில், புலம்பெயர் புலிகளின் தேவைக்களுக்கான அரசியல் நோக்குடன் செயற்படுபவர்கள் தொடர்பிலும் நாம் வழிப்படைந்துள்ளோம். அவர்களின் தேவை என்ன என்பதை தெளிவாகக் கூறியுள்ளோம்.
எனவே இந்தியா நியாயத்தின் பக்கமே நிற்கும் என்று ஸ்திரமாக நம்புகின்றோம். அத்தோடு சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கைக்கு சார்பாக பேசும் நாடுகளுக்கு நன்றி கூறுகின்றோம். இந்நாடுகள் யதார்த்தத்தை உணர்ந்து செயற்படுவதைப் போலவே, தற்போது அநீதிக்கு துணைபோகும் நாடுகளையும் உண்மையை உணர்ந்து செயற்படுமாறும் அநீதிக்கு துணைபோக வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment