இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு நீதி பெற்றுத் தருவதற்கான நடவடிக்கை வரவேற்கத்தக்கது - பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 24, 2021

இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு நீதி பெற்றுத் தருவதற்கான நடவடிக்கை வரவேற்கத்தக்கது - பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ்

'இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி அதில் தெரியவரும் உண்மைகளை ஆவணப்படுத்துவதற்காக பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கக் கோரும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு நீதி பெற்றுத் தருவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்' என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது 'ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தில் இலங்கை இறுதிப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி, அதில் தெரியவரும் உண்மைகளை ஆவணப்படுத்துவதற்காக பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கக் கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்து இங்கிலாந்து, நெதர்லாந்து, கொரியா, இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட 22 நாடுகள் வாக்களித்துள்ளன. சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாமல் புறக்கணித்தன.

இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை இந்தியா கண்டிப்பாக ஆதரித்து வாக்களிக்களித்திருக்க வேண்டும். ஆனாலும் இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுக்காமல், இந்தியா நடுநிலை வகிப்பதிருப்பது தமிழர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது. தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கைப் போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள், இனப் படுகொலைகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை குறித்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் (international criminal court) அல்லது அதற்கு இணையான அமைப்புகளின் விசாரணைக்கு ஆணையிடுமாறு ஐ.நா. பொது அவைக்கும், ஐ.நா. பாதுகாப்பு அவைக்கும் பரிந்துரைக்க வேண்டும்.

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை விசாரித்து ஆவணப்படுத்த சிரியா, மியன்மார் நாடுகளுக்காக அமைக்கப்பட்டது போன்ற பன்னாட்டு பொறிமுறையை (international impartial and independent mechanism IIIM) உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அறிக்கைகளும், டுவிட்டர் இயக்கமும், தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மக்கள் கட்சி முன்வைத்த இந்த கோரிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமாக கொண்டு வந்ததும், அது நிறைவேற்றப்பட்டிருப்பதும் பெரும் முன்னேற்றமாகும்.

இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து விசாரித்து ஆவணப்படுத்துவதற்காக பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் போர்க் குற்றங்கள் குறித்த புகார்கள் குறித்த அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டு, ஆவணப்படுத்தப்படும்.

இந்த பணிகள் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைவடைய வாய்ப்புகள் உள்ளன. அதன் பின்னர் பன்னாட்டுப் பொறிமுறை ஆவணப்படுத்திய ஆதாரங்களை அடிப்படையாக வைத்து மனித உரிமைகளில் அக்கறை உள்ள எந்த நாடும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் வழக்கு தொடர முடியும்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இலங்கை மீதான போர்க் குற்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி திரட்டப்படும் ஆதாரங்கள் குறித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

அது குறித்து விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விவாதங்களில் இந்தியா தவறாமல் கலந்து கொண்டு இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஆவணங்களை வலுப்படுத்தவும், போர்க் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி தண்டிப்பதும் மூலம், கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தர இந்தியா உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கேட்டுக் கொள்கிறேன்.' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment