ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 23, 2021

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும், 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்து பிரித்தானியா தலைமையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 4 மணியாளவில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததுடன், 11 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும், 14 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்திருந்தன.

இந்நிலையில், இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானம் அமைந்துள்ளதாக வாக்கெடுப்பின் போது பிரித்தானியா தெரிவித்துள்ளது.

அத்துமீறிய தலையீடாகவே இலங்கைக்கு எதிரான தீர்மானம் அமைந்துள்ளது எனவும் இலங்கை அதனை கடுமையாக எதிர்ப்பதாகவும் அமர்வில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் அரசியல் மயப்பட்ட இரட்டை நிலைப்பாட்டையுடையதென ஜெனிவா அமர்வில் சீனா தெரிவித்துள்ளது.

மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் பொறுப்புக்கூறலிலும் இலங்கையின் ஈடுபாட்டை தாம் வரவேற்பதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.

நடுநிலையற்ற இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தாம் எதிர்ப்பதாக ஜெனிவாவில் ரஷ்யா அறிவித்துள்ளது.

இலங்கை தமிழர்களின் அனைத்து வித அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள் என ஜெனிவாவில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

தீர்மானத்திற்கு ஆதரவாக ஆர்ஜன்டீனா, ஆர்மேனியா, அவுஸ்திரியா, பஹமாஸ், பிரேசில், பல்கேரியா, ஐவரிகோஸ்ட், செக் குடியரசு, டென்மார்க், பிஜி தீவுகள், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மலாவி, மார்ஷல் தீவுகள், மெக்சிக்கோ, நெதர்லாந்து, போலந்து, கொரியா, உக்ரைன், பிரித்தானியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் வாக்களித்துள்ளன.

இந்த தீர்மானத்திற்கு எதிராக பங்களாதேஷ், பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சோமாலியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் வாக்களித்துள்ளன.

இதேவேளை, இந்தியா, பஹ்ரைன், புர்கினாஃபசோ, கெமரூன், கெபோன், இந்தோனேசியா, ஜப்பான், லிபியா, மொரிட்டானா, நமீபியா, நேபாளம், செனகல், சூடான், டோகோ ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஒன்றிணைந்த குழு சமர்ப்பித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை ​சீனா கோரியது.

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆறாவது தீர்மானம் இதுவாகும்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான விவாதம் நேற்று (22) இடம்பெற்று வாக்களிப்பு மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், விவாதத்தை ஒழுங்குப்படுத்துவது தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, குறித்த விவாதம் இன்று (23) வரை பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment