ஜனாஸாக்களுடன் வருபவர்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் ஓட்டமாவடி முடக்கப்படலாம்? - முன்னாள் அமைச்சர் அமீர் அலி - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

ஜனாஸாக்களுடன் வருபவர்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் ஓட்டமாவடி முடக்கப்படலாம்? - முன்னாள் அமைச்சர் அமீர் அலி

இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்கின்ற பணிகள் ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாஸாக்களோடு மிக அதிகம் பேர் வருகிறார்கள். அவ்வாறு கூடுதலான நபர்கள் ஓட்டமாவடி பிரதேசத்துக்கு வருவதனால் எதிர்காலத்தில் புதிய தொற்றுக்கு அந்தப் பிரதேசம் ஆளாகிக் கொள்ள முடியும் என்கின்ற ஒரு எதிர்பார்ப்பு நிலவுவதாக இராணுவத்தினரும், சுகாதாரப் பிரிவினரும் சுட்டிக்காட்டுகின்றனர். 

அத்தோடு, இவ்வாறு கூடுதலான நபர்களின் வருகையால் இந்தப் பணியினை அவர்களால் சிறப்பாக செய்ய முடியாத ஒரு நிலவரம் காணப்படுவதாகவும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவரை, அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் வாரக் கணக்கில், மாதக் கணக்கில் குளிரூட்டிகளில் வைக்கப்பட்ட ஜனாஸாக்கள் என்ற அடிப்படையிலே தொற்றுக்கள் குறைவாக இருக்கும். 

வரவுள்ள ஜனாஸாக்கள் புதிய ஜனாஸாக்கள் என்கின்ற படியால் அவர்களோடு அதிகம் பேர் வருகின்ற காரணத்தினால் சிலவேளை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களும் இந்தப் பிரதேசத்துக்கு வந்து செல்லலாம்.

இதன் காரணமாக சில வேளைகளில் ஓட்டமாவடி பிரதேசம் முடக்கப்படுகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டு விடலாம் என பாதுகாப்புத் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

எனவே, வெளியூர்களிலிருந்து வருபவர்கள் முடிந்தவரை இந்தப் பணியினை சிறப்பாக நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

தினகரன்

No comments:

Post a Comment