வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தி சிலை நிர்மாணிப்பு விவகாரம் : பிரதேச சபை உறுப்பினர் ஹாமித் மெளலவி கண்டனம் - News View

Breaking

Post Top Ad

Friday, March 26, 2021

வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தி சிலை நிர்மாணிப்பு விவகாரம் : பிரதேச சபை உறுப்பினர் ஹாமித் மெளலவி கண்டனம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மூவினங்களும் வாழும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரதேசத்தில் ஒரு இனம் சார்ந்து சிலை நிர்மாணிக்க எடுக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மெளலவி தெரிவித்துள்ளார்.

நேற்று 25.03.2021ம் திகதி தவிசாளர் ஏ.எம்.நெளபர் தலைமையில் இடம்பெற்ற பிரதேச சபையின் 36 வது அமர்வில் கலந்துகொண்ட அவர் பல்வேறு பிரேணைகளை முன்வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்துத் தெரிவித்த அவர் மூன்று இனங்களும் ஒற்றுமையாக புரிந்துணர்வோடு வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன ரீதியான கருத்துக்களைப் பேசி இன முறுகலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதுமாத்திரமன்றி ஊடகவியலாளர்களுக்கு காணி பகிர்ந்தளிக்கும் விடயத்திலும் ஒட்டு மொத்த முஸ்லிம் ஊடகவியலாளர்களைப் புறக்கணித்து தமிழ் ஊடகவியலாளர்களை மாத்திரம் உள்வாங்கி காணி பகிர்ந்தளித்தமை ஒற்றுமையோடு பயணிக்கும் இரு சமூகங்களையும் மூட்டி விடும் செயற்பாடாகும். இது விடயத்தில் அரசாங்கமும் கவனமெடுத்து முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அத்தோடு முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தி கண்டுள்ளதாக தமிழ் மக்களிடம் காட்டி குரோத மனோநிலையினை உருவாக்கி வருவதையும் கண்டிக்கிறேன்.

அதேபோன்று சகல இனங்களுக்கும் பொதுவான இடமாகவும் சுற்றுலா பிரதேசத்தை அண்டியும் காணப்படும் பொலிஸ் நிலைய சந்தியில் ஒரு இனத்தைப் பிரதிபலிக்கும் சுவாமி விபுலானந்தரின் சிலையை நிறுவுவதை விட்டு சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையிலான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முடியும். 

இல்லாவிட்டால் இந்த நாட்டுக்காக உயிர் நீத்த பொலிஸ் இராணுவ வீரர்களின் நினைவாக அவர்களைக் கெளரவிக்குமுகமாக நினைவுப்படிகமொன்றை நிறுவும் செயற்றிட்டங்களை முன்னெடுக்கவும் முடியும்.

மாறாக நாம் சுவாமி விபுலானந்தரின் தமிழுக்கான சேவையை மதிக்கிறோம். அவர் மேல் மரியாதை எமக்குள்ளது. இவ்வாறு தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றிய ஒருவரின் சிலையை இப்பிரதேசத்தில் நிறுவ எடுக்கும் முயற்சிகள் இன விரிசலையே ஏற்படுத்தும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad