உயிர் பிரிந்த பின்னரே தலை துண்டிப்பு - மரணத்துக்கான காரணத்தை அறிய தலை அவசியம் - தொடர்ச்சியாக தேடி விசாரணைகள் : பிரேத பரிசோதனையில் வெளிப்பட்ட உண்மைகள் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

உயிர் பிரிந்த பின்னரே தலை துண்டிப்பு - மரணத்துக்கான காரணத்தை அறிய தலை அவசியம் - தொடர்ச்சியாக தேடி விசாரணைகள் : பிரேத பரிசோதனையில் வெளிப்பட்ட உண்மைகள்

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு - டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம், குருவிட்டை பொலிஸ் பிரிவின் - தெப்பனாவ பகுதியை சேர்ந்த 30 வயதான திலினி யசோதா ஜயசூரிய மெனிகே எனும் யுவதியுடையது என மரபணு பரிசோதனையில் (டி.என்.ஏ.) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று கொழும்பு விஷேட சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் முன்னெடுத்த பிரேத பரிசோதனைகளில், குறித்த யுவதியின் தலையானது, அவர் மரணித்த பின்னரேயே உடலிலிருந்து வெட்டப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் யுவதி எப்படி மரணித்தார் என்பதை உறுதியாக கண்டறிய, அவரது தலைப்பகுதி அவசியம் என கொழும்பு விஷேட சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் அறிவித்துள்ள நிலையில், தலையை தேடிய விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று விஷேட செய்தியாளர் சந்திப்பினை நடாத்தியே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

இது குறித்து பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவிக்கையில், 'டாம் வீதியில் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி மீட்கப்பட்ட தலையற்ற சடலம், குருவிட்டை தெப்பனாவ பகுதியை சேர்ந்த யுவதியுடையது என ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட போதிலும், தலையின்றி சடலம் காணப்பட்டமையால் சந்தேகத்திற்கிடமின்றி ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் உடலிலிருந்து மீட்கப்பட்ட மரபணு மாதிரிகள், அவரின் தாய் மற்றும் சகோதரர்களின் மாதிரிகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டு உயிரியல் ரீதியிலான பிணைப்பை உறுதி செய்ய பகுப்பாய்வு முன்னெடுக்கப்பட்டது.

அரசின் மேலதிக இரசாயன பகுப்பாய்வாளர் டி.எச்.எல். டப்ளியூ. ஜயமான்ன முன்னெடுத்த பகுப்பாய்வினில், தாய் மற்றும் சகோதரர்களின் மாதிரிகளுடன் குறித்த யுவதியின் சடலத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் ஒத்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கை இன்று (நேற்று) காலை கிடைக்கப் பெற்றது.

இந்நிலையில் பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள தலையற்ற சடலம் மீது, ஆள் அடையாளம் டி.என்.ஏ. பரிசோதனை ஊடாக உறுதியான பின்னர் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைகளில் முக்கியமான சில கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது.

அதாவது குறித்த யுவதியின் தலை, அவர் மரணித்த பின்னரேயே அவரது உடலில் இருந்து வெட்டி வேறாக்கப்பட்டுள்ளது. அவர் கர்ப்பிணி அல்ல. அத்துடன் இறுதியாக உணவு உண்டு 2 முதல் 3 மணி நேரத்தில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.

எனினும் அவரது மரணத்துக்கான காரணம், உறுதியாக கண்டறியப்படவில்லை. தலைப்பகுதி, மரணத்துக்கான காரணத்தை கண்டறிய அவசியமானது என சட்ட வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார். எனவே குறித்த யுவதியின் தலைப்பகுதியைத் தேடி தொடர்ச்சியாக விசாரணை நடக்கிறது.

இந்த யுவதி கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என சந்தகேகிக்கப்படும் நிலையில், சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகரும் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், அறிவியல் தடயங்களை வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன ' என தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலக தகவல்கள், நேற்றைய பிரேத பரிசோதனைகளின் போது, குறித்த யுவதியின் தலையற்ற சடலத்தில் எந்த சித்திரவதை, தாக்குதல் காயங்களையோ அல்லது விஷம், நஞ்சூட்டப்பட்டமைக்கான அடையாளங்களோ இல்லை என தெரியவந்துள்ளதாகவும், அதனால் அவரது மரணம் சம்பவித்த விதத்தை உறுதி செய்ய தலைப்பகுதி அவசியம் என தெளிவானதாகவும் சுட்டிக்காட்டின.

முன்னதாக கொழும்பு - டாம் வீதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து கடந்த முதலாம் திகதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் மறுநாள் மொனராகலை படல்கும்புற பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad