கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கலாம்...! உங்கள் வீட்டின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளுங்கள் - எச்சரிக்கை விடுக்கும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 28, 2021

கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கலாம்...! உங்கள் வீட்டின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளுங்கள் - எச்சரிக்கை விடுக்கும் பொலிஸார்

(செ.தேன்மொழி)

சித்திரை புத்தாண்டு காலத்தில் பல குற்றச் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இவ்வாறன செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தமிழ் - சிங்கள புதுவருட கொண்டாட்டங்களின் போது, திட்டமிட்ட குழுவினர் மற்றும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களால் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.

இத்தகைய குற்றச் செயற்பாடுகள் தற்போதும் பதிவாகி வருகின்ற நிலையில் அவை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.

தங்கச் சங்கிலி, வாகனங்கள் கொள்ளை, தங்க நகை விற்பனை நிலையங்கள் மற்றும் நிதி நிலையங்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. அதனால் பொதுமக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். 

இதன்போது வீட்டை விட்டு வெளியில் செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

சொந்த வாகனங்களில் செல்பவர்கள், வாகங்களை நிறுத்தி வைக்கும் போது அதன் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிலையங்களில் பணத்தை வைப்பிலடச் செல்பவர்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், தங்களிடமுள்ள பணத்தை பாதுகாப்புடன் வங்கிக்கு கொண்டுச் செல்ல வேண்டும்.

இதேவேளை வர்த்தக நிலையங்கள் அருகில் காணப்படும் ஏனைய வர்த்தக நிலையங்களுடன் தொடர்பினை வைத்துக் கொள்வதுடன், ஏதேனும் அனர்த்தம் நிகழ்ந்தால் உடனே அதனை ஏனைய வர்த்தக நிலையங்களும் அறிந்து கொள்வதற்காக திட்டமொன்றை தயாரித்திருத்தல் வேண்டும்.

இந்நிலையில் வர்த்தக நிலையங்கள், நிதி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் இவ்வாறான நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டால் அது தொடர்பில் தெரியப்படுத்துவதற்காக, அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களின் தொலைபேசி இலக்கம் மற்றும் அவசர அழைப்பு பிரிவின் இலக்கங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment