பிரேசில் வரலாற்றில் முப்படை தளபதிகள் ஒரே நாளில் ராஜினாமா - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

பிரேசில் வரலாற்றில் முப்படை தளபதிகள் ஒரே நாளில் ராஜினாமா

பிரேசிலில் முப்படைகளின் தளபதிகள் ஒரே நாளில் ராஜினாமா செய்தனர். இதனால் அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெயீர் போல்சனாரோவுக்கு நெருக்கடி முற்றுகிறது.

சீனாவில் தோன்றி உலக நாடுகளுக்கு பரவிய உயிர்கொல்லி கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடந்த ஆண்டு துவக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தன.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலின் ஜனாதிபதி ஜெயீர் போல்சனாரோ கொரோனா வைரசை சாதாரண காய்ச்சலுடன் ஒப்பிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க மறுத்து விட்டார்.

இது அந்த நாட்டின் மீது கொரோனா வைரஸ் தனது கோரப்பிடியை இறுக்குவதற்கு வழி செய்தது. இதனால் உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் 2ஆவது இடத்தில் உள்ளது.

அங்கு இந்த கொடிய வைரஸ் 3 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பறித்து உள்ளது. அதேபோல் 1 கோடியே 25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை அடக்கம் செய்ய சவக்கிடங்குகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வைத்தியசாலை வளாகங்களில் உடல்கள் கிடத்தப்பட்டு உள்ளன.

நோயாளிகளுக்கான ‘ஒக்சிஜன்' கையிருப்பும் வெகுவாக குறைந்துவிட்டதாக வைத்தியசாலை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ஜெயீர் போல்சனாரோவின் அலட்சியப் போக்கே கொரோனா நெருக்கடிக்கு காரணம் என எதிர்க்கட்சிகளும், சுகாதார நிபுணர்களும் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கடந்த ஓராண்டாக அவரது செல்வாக்கு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த சூழலில் பிரேசிலின் வெளியுறவு அமைச்சராக இருந்து வந்த எர்னஸ்டோ அராஜுவோவின் செயல்பாடுகளால் பிற நாடுகளிடமிருந்து கொரோனா தடுப்பூசியை பெற முடியாமல் போனது என கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதேபோல் ஜனாதிபதி ஜெயீர் போல்சனாரோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராணுவ அமைச்சர் பெர்னாண்டோ அசெவெடோ இ சில்வா பதவி விலகினார்.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி ஜெயீர் போல்சனாரோ தனது அமைச்சரவையை மாற்றி அமைக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.

அதன்படி வெளியுறவு, ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நீதி உட்பட 6 சக்தி வாய்ந்த துறைகளின் அமைச்சர்களை மாற்றிவிட்டு புதிய அமைச்சர்களை நியமித்தார்.

இந்த நிலையில் நாட்டின் தரை, வான் மற்றும் கப்பல் ஆகிய முப்படைகளும் தனிப்பட்ட முறையில் அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி ஜெயீர் போல்சனாரோ தனக்கு அதிக அழுத்தம் கொடுத்ததாலேயே பதவியை ராஜினாமா செய்ததாக ராணுவ அமைச்சர் பெர்னாண்டோ அசெவெடோ இ சில்வா பரபரப்பு குற்றம் சாட்டினார். இது அந்த நாட்டு அரசியல் மட்டுமின்றி ராணுவத்திலும் பெரும் புயலை கிளப்பியது.

இந்த நிலையில் ஜனாதிபதி ஜெயீர் போல்சனாரோ ராணுவத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவர முயற்சிப்பதாக குற்றம் சாட்டி முப்படைகளின் தளபதிகள் ஒரேநாளில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.‌

ராணுவ தளபதி எட்சன் வீல் புஜோல், கப்பல் படை தளபதி ஆடம் இல்கஸ் பார்போசா மற்றும் விமானப் படை தளபதி அன்டோனியோ கார்லோஸ் பெர்முடெஸ் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

பிரேசில் வரலாற்றில் ஜனாதிபதி உடனான கருத்து வேறுபாட்டில் முப்படைகளின் தளபதிகள் ஒரே அணியில் நிற்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

இதனால் பதவிக்கு வந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக ஜனாதிபதி ஜெயீர் போல்சனாரோ மிகப்பெரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்

No comments:

Post a Comment

Post Bottom Ad