நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி...! பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் இம்ரான் கான் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 6, 2021

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி...! பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை (மேலவை) தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) வேட்பாளரும், நிதியமைச்சருமான அப்துல் ஹஃபீஸ் ஷேக்கை, பாகிஸ்தான் ஜனநாயக இயக்க (பிடிஎம்) வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான யூசுஃப் ரஸா கிலானி தோற்கடித்தார். 

இந்த தோல்வி, பிரதமா் இம்ரான் கானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரதமா் பதவி விலக வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கின.

இதனால், தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதாக இம்ரான் கான் அறிவித்தாா். 

நேற்று முன்தினம் மாலை தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான் கான், நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். 

மேலும், பிடிஐ கட்சியைச் சோ்ந்த தேசிய சபை உறுப்பினா்கள் தவறாது கலந்துகொண்டு எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

அதன்படி இன்று காலை பாகிஸ்தானின் தேசிய அவை கூடியது. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து எதிர்க்கட்சி கூட்டணிகள் வெளிநடப்பு செய்தன. 

342 உறுப்பினர்களை கொண்ட தேசிய சபையில் 178 வாக்குகளை பெற்று தனது அரசுக்கு பெரும்பான்மையை இம்ரான் கான் காட்டினார். 

பாகிஸ்தான் தேசிய சபையில் பெரும்பான்மைக்கு 172 வாக்குகள் தேவை என்ற நிலையில் அதை விட கூடுதலான ஆதரவுடன் இம்ரான் கான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.

No comments:

Post a Comment