கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் செவ்வாய்க்கிழமை மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்து விட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்த பெண்கள் தமது ஊழியர்கள் என்று உள்ளூர் ஒளிபரப்பாளர் எனிகாஸ் தொலைக்காட்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வலையமைப்பை விட்டு வெளியேறிய பின்னர் அவர்கள் இரண்டு தனித்தனி தாக்குதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டதாக நிலைய இயக்குநர் சல்மாய் லதிபி தெரிவித்தார்.
“அவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர்கள் அலுவலகத்திலிருந்து கால்நடையாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர் ”என்று லதிபி கூறினார்.
துப்பாக்கிச் சூட்டில் வழிப் போக்கர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர்.
மூன்று பெண்களும் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகள் என்று லதிபி கூறினார்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஆயுதமேந்திய சந்தேக நபர் ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நங்கர்ஹார் காவல்துறைத் தலைவர் ஜுமா குல் ஹேமத் தெரிவித்தார்.
தாக்குதலை மேற்கொண்ட ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சந்தேக நபர் தப்பிக்க முயன்றபோது நாங்கள் அவரை கைது செய்தோம் என்று கூறியுள்ள ஹேமத், அவர் ஒரு தலிபான் உறுப்பினர் என்றார்.
இருப்பினும் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித், இந்தக் கொலைகளில் குழுவிற்கு எந்தப் பங்கும் இல்லை என்று மறுத்தார்.
No comments:
Post a Comment