(ஆர்.யசி)
இலங்கையின் எல்லை பாதுகாப்பில் இந்தியாவின் ஒத்துழைப்புகளை கட்டாயம் பெற்றாக வேண்டும், கடல் எல்லை பாதுகாப்பில் இந்தியாவே பிரதானமானதாகும் என விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தெரிவித்தார்.
இலங்கையின் விமானப் படை பலவீனமானது என்பதே உண்மையாகும். எமது தாக்குதல் சக்தி 20 வீதத்திற்கும் குறைவானதாகும் எனவும் அவர் கூறினார்.
இலங்கை விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இலங்கையில் இடம்பெற்று வரும் விமானப்படை கூட்டு கண்காட்சிகள் குறித்தும், இந்திய விமானப் படையை இணைத்துக் கொண்டமை ஏன் என வினவியபோது அவர் இதனை கூறினார்.
இலங்கையின் பிராந்திய நாடுகளாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பசுபிக் எல்லையில் பலமான அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புக்கள் எமக்கு கிடைத்து வருகின்றது. எனினும் இலங்கையின் எல்லையை பாதுகாக்க வேண்டுமானால் இந்தியாவுடன் இணைந்தே செயற்பட வேண்டும்.
அவுஸ்திரேலியாவும் கடல் எல்லை பாதுகாப்பில் எம்முடன் இணைந்து செயற்படுகின்றது. அதேபோல் இந்தியாவின் ஒத்துழைப்புகள் எமக்கு வேண்டும்.
இலங்கையின் விமானப் படை கடந்த காலங்களில் பலவீனமாக காணப்பட்டது, எனினும் இப்போது அரசாங்கம் புதிய வேலைத்திட்டங்களை உருவாக்கி விமானப் படைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.
ஆனால் இலங்கையின் விமானப் படை பலவீனமானது என்பதே உண்மையாகும். தாக்குதல் சக்தி 20 வீதத்திற்கும் குறைவானதாகும். இலங்கை விமானப் படையிடம் தாக்குதல் விமானங்கள் பலவீனமாதாக காணப்படுகின்ற காரணத்தினால் நட்பு நாடுகளை நாட வேண்டியுள்ளது.
இப்போது வரையில் கபீர் (kafir) விமானம் ஒன்றே எம்மிடம் உள்ளது, மேலும் ஐந்து கபீர் விமானங்களை இஸ்ரேல் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ளோம். பாவனையில் உள்ள விமானங்களையே நாம் பெற்றுக் கொள்ளவுள்ளோம்.
அதேபோல் இம்முறை இந்தியாவின் விமானப் படைகளும் எம்முடன் இணைந்து நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றன. அரசியல் நோக்கங்கள் எதுவும் இல்லை, இது வழமையான ஒன்றாகும்.
நட்பு நாடுகளுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடுகின்றோம், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் சில நாடுகளுடன் நாம் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடுகின்றோம். அவ்வாறு இருக்கையில் எம்மை கௌரவிக்கும் விதமாகவும், நட்புறவை மேலும் பலப்படுத்தும் விதமாகவுமே இந்த செயற்பாடுகளை கருத வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment