இலங்கை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி மீது ஜனாதிபதி ஆணைக்குழு குற்றச்சாட்டு - அறிக்கை தொடர்பில் தற்போதைய சூழ்நிலையில் கருத்து வெளியிட முடியாது - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 2, 2021

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி மீது ஜனாதிபதி ஆணைக்குழு குற்றச்சாட்டு - அறிக்கை தொடர்பில் தற்போதைய சூழ்நிலையில் கருத்து வெளியிட முடியாது

இலங்கையில் 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட தற்போதைய சூழ்நிலையில் முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட, அவர் தொடர்பாக கூறப்பட்டுள்ள விடயங்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தது. அப்போது அவரது தரப்பில் பேசிய அதிகாரியே இந்த விடயத்தை தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை நிராகரிப்பதாக சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் ஏதேனும் விமர்சனங்கள் இருக்குமாக இருந்தால், அது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயார் என இலங்கை அரசு தெரிவிக்கிறது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமையாக ஆராய்ந்து வருவதாக அந்த அதிகாரி கூறினார்.

அறிக்கை வெளியாகி, சில தினங்களே ஆகின்ற நிலையில், இந்த அறிக்கை தொடர்பில் தற்போதைய சூழ்நிலையில் கருத்து வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்கதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்ககல் செய்யப்பட்டது.

சிறிசேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரை
இந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கையில் சில நபர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை தொடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக அறிய முடிகிறது.

அந்த வகையில் ஈஸ்டர் தினத் தாக்குதலை தடுத்து நிறுத்தும் பொறுப்பிலிருந்து தவறியமைக்காக, அப்போது பதவிலிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடுப்பதற்கு, தனது அறிக்கையில் அந்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இது இவ்வாறிருக்க ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையினை ஆராய்வதற்காக கடந்த வாரம் 6 பேரைக் கொண்ட குழுவொன்றினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்தார்.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில், மேலும் ஐந்து அமைச்சர்கள் இந்தக் குழுவுக்காக நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஆராய இவ்வாறு குழுவொன்று நியமிக்கப்பட்டமையானது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக, கத்தோலிக்க ஆயர்கள் சங்கம் குற்றம் சாட்டியிருந்தது.

இந்தப் பின்னணியில் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையினை ஆராய்ந்து மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர், தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவுள்ளதாக, அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

மேலும், அறிக்கையை ஆராய்வதற்காக தமது தலைமையில் நியமிக்கப்பட்ட குழு மீது சந்தேகம் கொள்ள வேண்டாம் என்றும், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உள்ளவற்றை தாம் மூடி மறைக்க மாட்டோம் எனவும் அவர் கூறியிருந்தார்.

இலங்கை அரசு என்ன சொல்கிறது?
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆணைக்குழு அறிக்கையில் ஏதேனும் விமர்சனங்கள் இருக்குமாக இருந்தால், அது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், அது தொடர்பில் தற்போதும் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு மற்றும் குற்றத் தடுப்பு பிரிவு ஆகியன விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இலக்கு வைத்து, குறித்த அறிக்கையில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கருத்து வெளியிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு என்பது சுயாதீன குழு என்பதனால், அந்த அறிக்கைக்கான பொறுப்பை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் கூறுகின்றார்.

இந்த ஆணைக்குழுவின் ஊடாக யாரேனும் ஒரு தரப்பிற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அது தொடர்பில் உயர் நீதிமன்றத்தை நாட முடியும் என கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் என்ன உள்ளது?
2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு அழைக்காதிருந்தமைக்கான நியாயமான காரணங்களை முன்னாள் ஜனாதிபதி, ஆணைக்குழுவிடம் முன்வைக்கவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும், தான் பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு அழைக்கப்படாமை தொடர்பில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் அல்லது அமைச்சரவையில் கேள்வி எழுப்பிய இருக்க வேண்டும் எனவும், அதற்கான பொறுப்பு அவர் வசம் காணப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி முதல் 16ம் திகதி வரை அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, ஜனாதிபதி செயலகத்திற்கு சில தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கான விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்திலும், நிலந்த ஜயவர்தன தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக ஆணைக்குழு கணிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி முதல் 16ம் திகதி வரை தனக்கு கிடைத்த புலனாய்வு தகவல்களை, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியிருக்கக்கூடும் என ஜனாதிபதி ஆணைக்குழு கருதுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் மற்றும் சஹ்ரான் ஹாஷ்மி ஆகிய தரப்பிடமிருந்து நாட்டிற்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றதை அறிந்திருந்தும், 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி முதல் 21ம் திகதி வரை முன்னாள் ஜனாதிபதி, இந்தியா மற்றும் சிங்கப்பூர் விஜயம் மேற்கொண்டுள்ளார் என அதில் கூறப்படுகிறது.

'பாதுகாப்பு அமைச்சரை நியமிக்கவில்லை'
எனினும், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்கவில்லை என ஆணைக்குழு விமர்சித்துள்ளது.

ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், மேல் கூறப்படுகின்ற குற்றங்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு குற்றவியல் பொறுப்பு உள்ளதாக ஆணைக்குழு கருதுகின்றது என அறிக்கை கூறுகிறது.

அதனால், தண்டனை சட்டக் கோவையிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து, சட்டமா அதிபர் பரிசீலிக்க வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இதேவேளை, தாக்குதல் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க மீது, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எந்தவொரு இடத்திலும் பரிந்துரை செய்யப்படவில்லை.

மேலும், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, தேசிய புலனாய்வுத்துறை பிரதானி சிசிர மென்டிஸ், அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பில் ஆராயுமாறு, சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர், ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் அப்போதைய ராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்கயை தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட அப்போதைய அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தொடர்பில் ஆராயுமாறு, ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அதேபோன்று, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தொடர்பிலும் ஆணைக்குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

வஹப் வாதம், ஸ்ரீலங்கா ஜமாத்தே இயக்கம், ஸ்ரீலங்கா ஜமாத் இஸ்லாம், ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடுகள், இலங்கையில் செயற்படும் பொதுபல சேனா அமைப்பு போன்ற அடிப்படைவாத குழுக்களின் செயற்பாடுகளே, ஈஸ்டர் தாக்குதல் நடத்துவதற்கு காரணிகளாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன கட்சியின் நிலைப்பாடு
ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்கதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின்போதே, குறித்த அறிக்கையை நிராகரிப்பதாக அந்த கட்சியினால் தீர்மானம் நிறைவுற்றப்பட்டது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக, 5 பேரை கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றினை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமித்தார்.

இந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையே, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, அவர் மீதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதை காண முடிகின்றது.

'முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான மனநிலை'
ஈஸ்டர் தாக்குதலை முதன்மைப்படுத்தி, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான மனநிலையை, பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் உருவாக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷரப் தெரிவிக்கின்றார்.

அரசியல் ரீதியில் சஹரான் குழுவை ஒரு தரப்பினர் பயன்படுத்தியுள்ளதாக அவர் குற்றஞ்சுமத்துகின்றார்.

இந்த மனநிலையின் பின்புலத்திலேயே, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

குற்றவியல் விசாரணை தாக்கல் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்யவில்லை என அவர் கூறுகின்றார்.

தமது கட்சித் தலைவர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது குடும்பம் இந்த தாக்குதலுடன் தொடர்புப்பட்டுள்ளதாக தெரிவித்தே, அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், ரிஷாட் பதியூதீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அந்த குற்றச்சாட்டுக்களுக்கான பதில் தற்போது கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையினால் எதிர்வரும் 7ம் திகதி கறுப்பு ஞாயிற்று தினத்தை அனுஷ்டிப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக முஸ்லிம்களும் கைக்கோர்க்க வேண்டும் என அவர் அழைப்பு விடுக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்றால், தாம் அனைத்து தரப்புடனும் கைக்கோர்த்து பயணிக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷரப் தெரிவிக்கின்றார்.

பிபிசி தமிழ்

No comments:

Post a Comment