சிறியதொரு கட்டடத்துக்கு இடமாற்றப்பட்ட மருதமுனை வைத்தியசாலையின் அவலம் - குறைபாடுகளை தீர்த்து வைக்குமாறு வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

சிறியதொரு கட்டடத்துக்கு இடமாற்றப்பட்ட மருதமுனை வைத்தியசாலையின் அவலம் - குறைபாடுகளை தீர்த்து வைக்குமாறு வேண்டுகோள்

மருதமுனை பிரதேச வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டதையடுத்து, அங்கு இயங்கிய பிரதேச வைத்தியசாலை மருதமுனை காரியப்பர் வீதியில் உள்ள சிறிய சுகாதார மத்திய நிலையக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு கடந்த 2020.12.09 ஆம் திகதி முதல் இயங்கி வருகின்றது. குறைந்த வளங்களோடும், குறைந்த வசதிகளோடும் இவ்வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றது.

இந்த வைத்தியசாலையில் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய ​டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டதையடுத்து இவ்வைத்தியசாலையின் புதிய பொறுப்பு வைத்திய அதிகாரியாக சாய்ந்தமருது வைத்தியசாலையில் பொறுப்பு வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிய மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ளார் பொறுப்பேற்றுள்ளார்.

பெரிய இடப்பரப்பில் இயங்கி வந்த இந்த வைத்தியசாலை சிறிய கட்டடம் ஒன்றுக்குள் மாற்றப்பட்டதையடுத்து வைத்தியசாலை நிருவாகத்தினரும், சிகிச்சைக்கு வருகின்ற நோயாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இங்கு நான்கு ​டொக்டர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் மூன்று டொக்டர்களும், ஆறு தாதி உத்தியோகத்தர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் மூன்று பேர் மட்டுமே கடமை புரிகின்றனர். 

அத்தோடு மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்ப உத்தியோகத்தர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதால் அந்த வெற்றிடம் நிரப்பப்படாமல் உள்ளது.

மேலும் ஒரு வைத்தியரினதும் மூன்று தாதி உத்தியோகத்தர்களினதும் வெற்றிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டியுள்ளது. மிகவும் விரிவான இட வசதிகளுடன் இயங்கி வந்த இவ்வைத்தியசாலை சிறிய இடமொன்றுக்குள் மாற்றப்பட்டதால் பெரும் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.

மேலும் கட்டட வசதிகளும், நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான வாட் வசதிகள், கட்டில்கள் மற்றும் அதனோடு ஒட்டிய தளபாடங்கள், மலசலகூட வசதிகள், நிருவாக அறை, கணனிப் பிரிவு, ஓய்வறை வசதிகள், களஞ்சிய அறை, சிறுவர் சிகிச்சைப் பிரிவு, தொற்றாநோய் சிகிச்சைப் பிரிவு என்பனவற்றுக்கான இட வசதிகள் என்பன உடனடியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டியுள்ளன.

இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதன் மூலம் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இங்கு இந்தச் சிறிய கட்டத்திற்குள் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, பற்சிகிச்சைப் பிரிவு, தொற்றா நோய் சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, பொதுவைத்திய சிகிச்சைப் பிரிவு, உளநலப் பிரிவு உள்ளிட்ட அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எல்.எம்.மிஹ்ளாரினதும், வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினதும் துரித நடவடிககையால் நோயாளர்களுக்கான அனைத்து சேவைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இங்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை எட்டு மணி தொடக்கம் பகல் 12 மணி வரைக்கும், பிற்பகல் 2 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரைக்கும், சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் பகல் 12 மணி வரைக்கும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஏனைய விடுமுறைகளிலும் காலை 8 மணி தொடக்கம் காலை 10 மணி வரைக்கும் நோயாளர்களுக்கான சேவை வழங்கப்படுகின்றது.

மேலும் அவசர சிகிச்சைப் பிரிவு 24 நேரமும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வைத்தியசாலை 24 மணி நேரமும் இயங்குவதால் இங்கு கடமையாற்றுகின்ற ​டொக்டர்களும், தாதி உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் கடமை நேரத்திற்கு மேலதிகமாக மேலதிக கொடுப்பனவுகள் எதுவுமின்றி கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி மற்றும் வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தரகள், மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்ப உத்தியோகத்தர் வெற்றிடங்கள், தளபாட பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்களை தீர்த்து வைப்பதற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி சபையினரும்,இப்பிரதேச மக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

(மருதமுனை நிருபர் - பி.எம்.எம்.ஏ. காதர்)

No comments:

Post a Comment