இராணுவத்தை பழிதீர்க்கவென புலம்பெயர் அமைப்புகளும் இங்குள்ள சிலரும் முயற்சி - எவரும் எமக்கு கற்பித்துதர வேண்டிய அவசியமில்லை : இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Monday, March 8, 2021

இராணுவத்தை பழிதீர்க்கவென புலம்பெயர் அமைப்புகளும் இங்குள்ள சிலரும் முயற்சி - எவரும் எமக்கு கற்பித்துதர வேண்டிய அவசியமில்லை : இராணுவத் தளபதி

(ஆர்.யசி)

இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கும் போர் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் விதமாக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாகவும், மனிதாபிமானமாக நாம் முன்னெடுத்த இந்த போராட்டம் குறித்து எவரும் எமக்கு கற்பித்துதர வேண்டிய அவசியம் இல்லை எனவும் இரணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இராணுவத்தை பழிதீர்க்கவென புலம்பெயர் அமைப்புகளும் இங்குள்ள சிலரும் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டுள்ளதுடன், இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவம் மீதான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இலங்கைக்கு எதிராக கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இது தொடர்பில் வினவிய போதே இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் நகர்வுகளை கையாள்வதில் அரசாங்கம் செய்ய வேண்டிய மிகச்சரியான நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.

இராணுவத்தை பாதுகாக்கும் விதமாக அல்லது, இராணுவத்தின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் விதமாக அரசாங்கம் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இது எமக்கும் மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு காரணியாக நாம் கருதுகின்றோம். 

பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பொய்யான சாட்சியங்களை உருவாக்கி இலங்கை இராணுவத்தை அவமதிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. புலம்பெயர் அமைப்புகளின் பணம் காரணமாக இங்குள்ள ஒரு சிலரும் இராணுவத்தை குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.

எவ்வாறு இருப்பினும் ஒரு சில நாடுகளுக்கு இந்த நாட்டின் அமைதியை சீர்குலைத்து நாட்டில் இன முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற தேவை உள்ளன. அதற்கான வெளிப்பாடுகள் இன்று மனித உரிமைகள் பேரவையிலும் வெளிப்பட்டு வருகின்றது. 

இராணுவம் மீது போர் குற்றங்களை சுமத்தி அதன் மூலமாக இராணுவத்தை பலி தீர்க்க முடியும் என்ற நோக்கம் அவர்களிடம் உள்ளது. ஆனால் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பது எமக்கு மட்டுமே தெரியும். மனிதாபிமானமாக நாம் முன்னெடுத்த இந்த போராட்டம் குறித்து எவரும் எமக்கு கற்பிக்க வர வேண்டிய அவசியம் இல்லை.

யுத்தத்தை 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே எம்மால் முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியும், ஆனால் அதனால் ஏற்படும் அழிவுகள் குறித்து எமக்கு நன்றாக தெரியும்.

அப்பாவி தமிழ் மக்களை பணயம் வைத்தே விடுதலைப் புலிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் அழிவுகளை சந்திக்கக் கூடாது அல்லது அழிவுகள் மிக குறைவாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நாம் மிகக் கவனமாக பயங்கரவாதத்தை மாத்திரம் இலக்கு வைத்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம்.

எனவே இன்று யுத்த குற்றங்களை சுமத்தி இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் நடவடிக்கைகளில் புலம்பெயர் அமைப்புகளும், இலங்கையில் ஒரு சிலரும் முன்னெடுத்து வருகின்றனர். இப்போது இல்லாவிட்டலும் எப்போதாவது அவர்களுக்கும் உண்மை விளங்கும். 

இலங்கையில் மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை அவர்களும் உருவாக்கித்தர வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். மாறாக யார் மீதும் நாம் வைராக்கியத்தை கொட்டி அவர்களை எமது எதிரிகளாக கருதும் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment