உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை மறைக்கவோ அல்லது காலங்கடத்தவோ முயற்சித்தால் அரசாங்கத்தின் மீதே மக்கள் சந்தேகம் கொள்வர் - திஸ்ஸ அத்தநாயக்க - News View

Breaking

Post Top Ad

Friday, March 12, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை மறைக்கவோ அல்லது காலங்கடத்தவோ முயற்சித்தால் அரசாங்கத்தின் மீதே மக்கள் சந்தேகம் கொள்வர் - திஸ்ஸ அத்தநாயக்க

(செ.தேன்மொழி)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மறைக்க முயற்சித்தாலோ, அல்லது காலங்கடத்த முயற்சித்தாலோ அரசாங்கத்தின் மீதே மக்கள் சந்தேகம் கொள்வார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

எனினும் மக்கள் எதிர்பார்த்த எதுவுமே அறிக்கையில் குறிப்பிடப்பட்டில்லை. இந்த தாக்குதலுடன் தொடர்பு கொண்ட பிரதான சூஸ்திரதாரி மற்றும் தற்கொலை தாரிகளுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய நபர்களின் விபரங்கள் தொடர்பில் கூட ஆணைக்குழு எந்த தரவுகளையும் சேகரித்திருக்கவில்லை.

இந்நிலையில் இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கையை எடுத்துள்ளது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றால், பிரதான சூஸ்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். 

இதேவேளை இந்த தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் நீதிமன்ற விசாரணைகளும் உடனே நிறைவுகான வேண்டும். அவ்வாறு எதுவும் இடம்பெறாவிட்டால் அரசாங்கம் வேணும் என்றே அதனை புறக்கணித்து வருகின்றது என்றே தோன்றுகின்றது. அதற்கமைய அவ்வாறு புறக்கணிப்பதற்கான காரணம் என்ன? அவ்வாறு புறக்கணித்தால் ஏதோ இரகசியம் அதில் காணப்படுவதாகவே தோன்றுகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றதினால், இது தொடர்பான பொறுப்பு இந்த அரசாங்கத்தை சார்ந்திருக்கின்றது. இந்நிலையில் அவர்களது ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளமையும் இதனூடாக தெரியவந்துள்ளது. ஆனால் இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்தும் காலங்கடத்தாமல் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காக அரசாங்கம் சர்வதேச நாடுகளுடனும் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்திலே மக்களது பார்வை அரசாங்கத்தின் மீது விழுவதை தவிர்க்க முடியாது.

இதேவேளை சீன நிறுவனமொன்று இலங்கை தேசியக் கொடியை கால் துடைப்பானாக நிர்மானித்து அதனை விற்பனை செய்வதற்காக இணையத்தின் ஊடாக விளம்பரம் செய்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? எந்தவொரு நாட்டினதும் தேசியக் கொடி இவ்வாறு கால் துடைப்பானாக நிர்மானிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் சீனாவுடனான உறவின் காரணமாக இது தொடர்பில் அமைதியாக இருக்க அரசாங்கம் எண்ணிக் கொண்டுள்ளதா? சீனாவுடன் அதிகமான கடன்களைப் பெற்றுக் கொண்டுள்ளதன் காரணமாக, மேலும் அவ்வாறு கடன்களை பெற்றுக் கொள்ள எண்ணியிருப்பதினால் அரசாங்கம் அமைதிகாத்து வருகின்றதா? எவ்வாறாயினும் இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் அமைதியாக இருக்காமல் உடனே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad